திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை மேற்கோள் காட்டிவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், குறிப்பிட்ட சில அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல உள்ளதாக ஒருமித்த குரலில் பேசிவருவது, தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.சமீப நாட்களாகவே, எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜகவும் திமுக அமைச்சர்களை குறி வைத்து குற்றச்சாட்டுகளை கூறிவருவதுடன், அவர்கள் சிறைக்கு செல்வது உறுதி என, அறுதியிட்டு பேசிவருவது அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.தமிழ்நாடு அரசியல் களம், சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகி வரும் சூழலில், அரசியல் கட்சி தலைவர்கள் சுழன்று சுழன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் திமுக அரசு, மத்திய அரசை கடுமையாக சாடியும், அதிமுகவை இதுவரை இல்லாத அளவுக்கு விமர்சித்தும் பரப்புரை செய்து வருகிறது. இந்நிலையில் தான், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுகவும் பாஜகவும் ஒருசேர திமுகவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. குறிப்பாக, ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் இரு கட்சிகளும், சொல்லி வைத்ததை போல அமைச்சர்கள் தேர்தலுக்கு முன்பே சிறைக்கு செல்வார்கள் என, ஆருடம் தெரிவித்து வருவது உற்றுநோக்க வைத்திருக்கிறது.என்ன தான் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலான கருத்துகள் என்றாலும், செல்லும் இடமெல்லாம் இரு கட்சி தலைவர்களும் ஒரே கருத்தை திரும்ப திரும்ப சொல்லி வருவது, பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் 17 திமுக அமைச்சர்களின் பட்டியல் தயாராகி விட்டதாகவும், அதில் யார் யார் சிறைக்கு செல்வார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் தடாலடியாக கூறினார். அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பிறகு, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது போன்றதொரு கருத்தை தான் சில நாட்களுக்கு முன் இபிஎஸ் கூறியிருந்தார்.மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக, சிபிஐ, ED உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், நயினார் நாகேந்திரனின் மிரட்டல் தொனியிலான பேச்சு, அந்த குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. திமுகவினரை குறிவைத்து அடுத்தடுத்து நடந்த அமலாக்கத்துறையின் ரெய்டுகளை மனதில் வைத்துக் கொண்டு தான் நயினார் இப்படி பேசி வருகிறாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. தமிழக அமைச்சரவையில் உள்ள 10க்கும் மேற்பட்டோர், ஊழல் புகாரில் சிக்கியிருப்பது அனைவரும் அறிந்தது. நகராட்சி நிர்வாகத்துறையில் அண்மையில் நடைபெற்ற பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடந்ததாக, காவல்துறை டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. இந்த ஊழலில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு நேரடி தொடர்பிருப்பதாகவும் கூறி பரபரப்பை கூட்டியிருந்தது. இதே போல், 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது வேலூர் தொகுதியில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் அமைச்சர் துரைமுருகன் வீட்டிலும், அடுத்தடுத்து அவரது மகன் கதிர் ஆனந்த், நண்பர்களுக்கு சொந்தமான இடம் என ஒவ்வொன்றாக அமலாக்கத்துறை துலாவி எடுத்தது.போக்குவரத்து துறையில் பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜியும், செம்மன் குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி என பலரும் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் உள்ள நிலையில், இன்னும் பல அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கையும் எதிர்கொண்டு வருகின்றனர். இதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு ஆளானது திமுகவினரை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இதுதவிர, டாஸ்மாக் ஊழல், மணல் குவாரி முறைகேடு என, அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டு எழுந்து திமுகவை நெருக்கடிக்கு ஆளாக்கியிருக்கிறது.என்ன தான் அமலாக்கத்துறை தன்னிச்சையான அமைப்பு என பாஜக அடித்துக் கூறினாலும், அமலாக்கத்துறையின் பெயரை சொல்லி வெளிப்படையாக பாஜக தலைவர்கள் மிரட்டும் போது அது பொய்யாக இருக்குமோ எனத்தான் எண்ண தோன்றும். ஒருவேளை உண்மையிலேயே இந்த ஊழல் வழக்கு விசாரணை அடுத்த சில மாதங்களில் தீவிரப்படுத்தப்பட்டால், அது திமுகவுக்கு நெருக்கடியாக மாறுமா? அல்லது இது போன்ற நெருக்கடியே திமுகவுக்கு அனுதாபமாக மாறி, பாஜகவுக்கு ரிவீட் அடிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.