ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, கர்னூல் அருகே விபத்துக்குள்ளான சோகம் அரங்கேறி உள்ளது. இந்த பேருந்தில் 2 ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 41 பேர் இருந்தனர். பேருந்து, பைக் மீது மோதியதை அடுத்து அந்த பைக் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டது. பைக்கில் இருந்த பெட்ரோல் கசிந்து தீ பிடித்ததில் பேருந்து தீப்பிடித்துக் கொண்டது. இதில், பேருந்தில் இருந்த 41 பேரில் 21 பேர் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்தில் இருந்து 11 இறந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த சம்பவம், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், பயணிகள் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். விபத்துக்குப் பிறகு பேருந்தின் கதவுகள் திறக்கப்படவில்லை. இரண்டு ஓட்டுநர்களும் தீ விபத்தில் இருந்து தப்பினர். தீ விபத்துக்கு பிறகு, பேருந்து கண்ணாடியை உடைக்க சுத்தியல் எதுவும் பேருந்திற்குள் இல்லை. பைக் மோதிய பிறகு பேருந்தின் ஓட்டுநர் வண்டியை நிறுத்தவில்லை. பேருந்தின் டீசல் டேங்க் தீப்பிடிக்கவில்லை. ஆனால், பேருந்து முற்றிலும் சேதமடைந்து விட்டது.இதுகுறித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட பதிவில், "கர்னூலில் ஏற்பட்ட ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் பலர் உயிரிழந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என கூறி உள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், "இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்" என கூறப்பட்டுள்ளது. அதிர வைக்கும் விபத்தின் பின்னணி: தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து நேற்றிரவு 10.30 மணிக்கு வி காவேரி எனும் தனியார் சொகுசு பேருந்து 41 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம், கர்னூல் வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, கர்னூல் மாவட்டம், 44-வது தேசிய நெடுஞ்சாலையில் சின்ன டேக்கூரு எனும் இடத்தில், இன்று அக்.24, அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது சொகுசு பேருந்து வேகமாக மோதியது.இதில், பைக்கில் இருந்தவர் தூக்கி எறியப்பட்டுள்ளார். ஆனால், பேருந்தின் அடியில் அந்த பைக் சிக்கி கொண்டது. பேருந்தின் ஓட்டுநர் இதனை கவனிக்காமல் பேருந்தை சுமார் 350 மீட்டர் வரை ஓட்டியுள்ளார். இதில் பைக்கில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்துள்ளது. இதில், பேருந்தில் தீப்பற்றி, மளமளவென பேருந்து முழுவதும் தீ பரவியுள்ளது.அதிகாலை தூங்கி கொண்டிருந்த பயணிகளில் கீழ் வரிசையில் உள்ள படுக்கையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மட்டுமே பேருந்தில் இருந்து இறங்கி உயிர் பிழைத்தனர். மேல் படுக்கையில் படுத்து தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து கீழே இறங்குவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவியது. தீ மற்றும் புகையினால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில் பேருந்தில் இருந்த 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.சீட்டில் இருந்தபடியே, பலர் உயிருடன் எரிந்து இறந்துள்ளனர். எலும்பு கூடுகளாக இருக்கும் இவர்கள் யார் யார்? என்பது குறித்து டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கர்னூல் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பேருந்து ஓட்டுனரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ஒரே குடும்பத்தில் நால்வர்... நெல்லூரை சேந்த ரமேஷ் - அனுஷா தம்பதியும் அவர்களது 8 வயது மகள் மற்றும் 6 வயது மகன் என்று, இந்த தீ விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.