மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி, திமுகவும், கூட்டணி கட்சி எம்.பி.க்களும் முழுக்கம் எழுப்பியதால் அவையே பரபரப்பானது. மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவு போட்ட நீதிபதியை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு விமர்சித்த போது, எழுந்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, டிஆர் பாலுவின் பேச்சால் அவருக்கும், அவரது கட்சிக்கும் பிரச்சனை ஏற்படலாம் என எச்சரித்தார். திருப்பரங்குன்றம் மலையை வைத்து ஒவ்வொரு நாளும் மத ரீதியாக பிரச்சனை பூதாகரமாகி வருகிறது. மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, 2ஆவது முறையாக உத்தரவிட்டும், போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்திருக்கும் நிலையில், நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்து, களேபரமா கியிருக்கிறது. குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதோடு, திமுகவும், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி.க்களும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன் வைத்து முழக்கம்எழுப்பினர்.ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது என்று கூறிய சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த விவகாரம் அரசு சார்ந்த விவகாரம் கிடையாது என்பதால் விவாதிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனிடையே, மக்களவையில் பேசிய திமுக எம்பி., டி.ஆர்.பாலு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை, இந்துத்துவா அமைப்புகளுடன் ஒப்பீட்டு பேசவேஅவையில் உச்சக்கட்ட பரபரப்பு உருவானது.தனி நீதிபதியின் உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்ற எம்.பி. டி.ஆர்.பாலு, 2014ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது எனவும் கூறினார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்த டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பவே, பதிலுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி.க்களும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று கோஷம் எழுப்பியதால் அவையே அமர்க்களமானது. அதோடு, அமளிகாரணமாக அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதோடு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை, இந்துத்துவா அமைப்புகளுடன் ஒப்பிட்டு டி.ஆர்.பாலு பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கொந்தளித்த கிரண் ரிஜிஜூ, டி.ஆர்.பாலுவின் பேச்சு அவருக்கும், அவர் சார்ந்த திமுக கட்சிக்கும் நல்லது கிடையாது என ஆவேசமானார்.எப்படி நீதிபதியை குறிப்பிட்டு அவ்வாறு பேசலாம் என ரிஜிஜூ கேள்வி எழுப்ப, பதிலுக்கு திமுக எம்.பி.க்களும் கோஷம் எழுப்ப அவையே சலசலப்பின் உச்சமாக இருந்தது. இதனையடுத்து, நாட்டில் எந்த ஒரு நீதிபதிக்கும் இப்படி சாயம் பூச முடியாது எனக் கூறிய சபாநாயகர், டி.ஆர்.பாலுவின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியதோடு, தமிழக காவல்துறை முழுக்க முழுக்க நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து அராஜகம் செய்திருக்கிறது என்றார். ஓட்டு வங்கி அரசியலுக்காக மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு தடுத்திருக்கிறது என ஆவேசமான எல்.முருகன், திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து இருக்கிறது எனவும் கொந்தளித்தார்.இதேபோல, மாநிலங்களவையிலும் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க மறுத்து விட்டநிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.