தவெக மாநாட்டில் திமுகவை விமர்சித்த அக்கட்சியின் தலைவர் விஜய்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட திமுக அழிய வேண்டும் என நினைப்பதாகவும் அது குறித்தெல்லாம் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் கூறினார்.சென்னையில் 'அனிதா அச்சீவர்ஸ் அகாடமி' மூலம் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான ஒருமித்த குரலுக்கு மத்திய அரசு ஒருநாள் பணியத்தான் போகிறது என நம்பிக்கை தெரிவித்தார்.தமிழக இளைஞர்கள் அனைத்து நிலைகளிலும் தகுதியுடையவர்களாக உயர்த்துவது தான் அரசின் லட்சியம் என குறிப்பிட்ட அவர், ஆனால் சிலர் ஆட்சியை வேண்டுமென்றே குறை கூறுவதாகவும், எஞ்சியிருக்கக்கூடிய ஓரிரண்டு தேர்தல் வாக்குறுதிகள் கூட விரைவில் நிறைவேற்றப்படும் என்றார். சென்னையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த மழைக் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் சிறப்பாக செயல்பட்ட அரசு அடுத்த நாளே தண்ணீர் இல்லாத அளவிற்கு மாற்றியதாகவும் ஆனால் சில ஊடகங்கள் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது தேங்கிய தண்ணீரின் புகைப்படங்களை போட்டுக்காட்டி அரசை குறைகூறுவதாகவும் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், திமுக வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை என்றவர், புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட திமுக அழிய வேண்டும் என நினைப்பதாக த.வெ.க தலைவர் விஜய்-க்கு மறைமுக குறிப்பிட்டார்நடிகர் விஜய்யின் "தமிழக வெற்றி கழகம்" என்ற கட்சியின் மாநில மாநாடு சமீபத்தில் நடந்த நிலையில், அந்த மாநாட்டில் திமுகவை விஜய் நேரடியாகவே விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் அதற்கு பதிலடியாக வசவாளர்களை வாழ்த்துவதாக கூறிய முதலமைச்சர்,தேவையில்லாமல் எல்லோருக்கும் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் பதில் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் தாக்கினார்.