கூட்டணி கட்சிகள் உடனான பேச்சுவார்த்தையை, திமுக தொடங்கிய நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒரே நாளில் 8 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிரடி காட்டிய திமுக, தொகுதி பங்கீட்டு குழு, இரு கட்சிகள் உடனான தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடித்துள்ளது.திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தைதமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில், அரசியல் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளது. இதன்படி திமுக, தமது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அன்று ஒரே நாளில் 8 கட்சிகளுடன் திமுகவின் தொகுதிப் பங்கீட்டு குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 2 தொகுதிகள்இந்த நிலையில், முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஐ.யூ.எம்.எல். கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் முன்னிலையில் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. அத்தொகுதிகளில், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஏணி சின்னத்தில் போட்டியிட்டு 3 தொகுதிகளிலுமே தோல்வியை தழுவியது. ஆனால், இந்த முறை ஐ.யூ.எம்.எல்-க்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியுள்ளது திமுக. இரு தொகுதியிலும் இந்த முறையும் ஏணி சின்னத்தில் போட்டியிடுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறிய, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், கடந்த காலங்களில் போட்டியிட்ட தொகுதிகளையே இந்த முறையும் ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் கோரிக்கை வைத்திருப்பதாக கூறினார்.திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இந்த முறை, கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்திருப்பதால், தங்களிடம் இருந்து ஒரு தொகுதியை வாங்கி கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்பதற்காக, ஒரு தொகுதியை குறைத்திருப்பதாக திமுக கூறியதாக காதர் மொய்தீன் தெரிவித்தார். அதற்கு பதிலாக புதுச்சேரியில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை, காங்கிரசுடன் பேசிவிட்டு நல்ல முடிவு சொல்வதாக திமுக தெரிவித்ததாகவும் அவர் கூறினார். மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு அதே போன்று, மனிதநேய மக்கள் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜவாஹிருல்லா முன்னிலையில் தொகுதி ஒதுக்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த தேர்தலை போல, இந்த முறையும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என ஒப்பந்தம் செய்யப்பட்டதாக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். எந்தெந்த தொகுதிகள்? அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவை எந்தெந்த தொகுதிகள் என்ற விவரத்தை அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின்போது இறுதி செய்யப்படும் என இரு கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் முடிவு இதற்கிடையே, திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பவை உள்ளிட்ட விவரங்கள் அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் முடிவாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Related Link திமுகவுக்கு சறுக்குமா ராதாபுரம்?