வரும் திங்களன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இனிப்பு, காரம் உள்பட சுவையான பலகாரங்களை வீட்டிலேயே தயாரிக்கும் பணியில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.விருதுநகர் ஸ்பெஷல்களில் ஒன்றான சாத்தூர் காரச்சேவு:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விருதுநகர் ஸ்பெஷல்களில் ஒன்றான சாத்தூர் காரச்சேவு தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. மிளகாய் வத்தல் மற்றும் மலைப்பூண்டை கொண்டு இதமான காரம் மற்றும் மொறு மொறுப்புடன் மிளகு சேவு, ராகி சேவு, கருப்பட்டி சேவு உள்பட பல்வேறு வகையான காராச்சேவுகள் தயாரிக்கப்படுகின்றன.ஆற்காடு ஸ்பெஷல் மக்கன் பேடா ஸ்வீட்:ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் நவாப் காலத்து புகழ் பெற்ற மக்கன் பேடா ஸ்வீட் தயாரிக்கும் பணியில் ஸ்வீட் கடை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாதாம், அத்திப்பழம், வெள்ளரி விதை, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பத்து வகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த வகையான இனிப்புகளை கிலோ கணக்கில் மக்கள் ஆர்டர் செய்துள்ளதாக, உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.அதிரசம் தயாரிக்கும் பணி தீவிரம்:திருவண்ணாமலை மாவட்டத்தில், பாரம்பரிய பலகாரமான அதிரசம், முறுக்கு, ரவா லட்டு உள்ளிட்டவை தயாரிக்கும் பணியில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தலை தீபாவளி கொண்டாட தயாராகும் தம்பதிக்கு, சுவையான அதிரசத்தை தயாரித்து வருகின்றனர்.மணப்பாறையில் தயாரிக்கப்படும் பால்கோவா;மணப்பாறை முறுக்கு போல இங்கு தயாரிக்கும் பால்கோவிற்கும் தனி மவுசு தான். தீபாவளியை முன்னிட்டு, மணப்பாறை பால்கோவா தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வழக்கத்தை விட அதிக அளவில் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.சிறுதானியங்களை கொண்டு உருவாக்கப்படும் பலகாரங்கள்;புதுக்கோட்டையில் வரகு, தினை, சாமை, கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட சிறு தானியங்களை கொண்டு முறுக்கு, மிக்சர், அதிரசம், சீடை மற்றும் லட்டு உள்பட பல்வேறு வகையான பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.