தனது விவாகரத்தை வித்தியாசமாக கொண்டாடிய கணவரின் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் தான், தத்தா பிராதர்(Biradar DK). இவர் சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ தான் நெட்டிசன்ஸ் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. வீடியோவின் தொடக்கத்தில், தரையில் அமர்ந்திருக்கும் பிராதருக்கு அவரது தாயார் பால் அபிஷேகம் செய்கிறார். இதையடுத்து நன்கு குளித்துவிட்டு தனது அறைக்குள் செல்லும் அவர், மிகவும் ஆடம்பரமான மற்றும், பளபளப்பான புத்தாடை ஒன்றை அணிந்து கொள்கிறார். தொடர்ந்து அவரது உடைக்கு ஏற்ற காலணி அணிந்து கொண்டு, புது மாப்பிள்ளை போல் வெளியே வருகிறார். இதையடுத்து டேபிள் மீது வைக்கப்பட்டுள்ள கேக்கை வெட்டி உற்சாகமாகக் கொண்டாடுகிறார். இவ்வளவு நேரம் ஏதோ அவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தான் நடக்கிறது என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் அந்த கேக்கை உற்று கவனித்துப் பார்த்தால் அதில், “மகிழ்ச்சியான விவாகரத்து” என எழுதப்பட்டிருந்தது. பின்னர் தான் தெரிகிறது, அவரது மனைவியிடம் பெற்ற விவாகரத்தை தான் இவ்வளவு மகிழ்ச்சியாக அவர் கொண்டாடுகிறார் என்று. இதுமட்டுமின்றி, , திருமணத்தின்போது அவரது மனைவி கொண்டு வந்த 120 கிராம் தங்க நகை மற்றும் ரூ.18 லட்சம் ரொக்கத்தை அவரிடமே திருப்பி கொடுத்து விட்டதாகவும் பிராதர் அந்த வீடியோவில் பெருமையாகப் பதிவிட்டுள்ளார். 30 லட்சம் பார்வைகளை கடந்த இந்த காணொலிக்கு பல தரப்பிலிருந்து ஆதரவு, வாழ்த்து குவிந்து வருகிறது. ஒவ்வொரு முடிவும் சோகமாகவோ அல்லது துக்கமாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை, சிலருக்கு, அது ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் வாய்ப்பாகவும் கூட இருக்கலாம் என நெட்டிசன்கள் ’கமென்ட்’ செய்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.