ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி எனக் கூறும் செங்கோட்டையன், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய இபிஎஸ், திமுகவை எதிர்த்து சட்டமன்றத்திலோ, பொதுக் கூட்டத்திலோ பேசியது கிடையாது என்பதால் தான், திமுகவின் பி டீம் எனக் கூறுவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து, இபிஎஸ் கூறி இருப்பதாவது:அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்ததற்காக, கட்சி சார்பற்ற விழாவில் நான் பங்கு பெற்றேன். ஆனால், செங்கோட்டையன் பங்கேற்காமல் சென்றுவிட்டார். அந்த நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை, அதனால் தான் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் கூறினார்.ஆனால், தமிழக அரசின் இலவச சைக்கிள் கொடுக்கும் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்றார். அந்த விழாவில் கருணாநிதி, ஸ்டாலின் புகைப்படங்கள் தான் இருந்தன. சைக்கிள் கொடுக்கும் விழாவில் எங்கே ஜெயலலிதா படம்?. கடந்த ஆறு மாதங்களாகவே, கட்சிக்கு எதிராக தான் இருந்தார் செங்கோட்டையன்.அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறுகிறார். ஆனால், செங்கோட்டையன் சொல்பவர்கள் எல்லாம் பிரிந்து சென்றவர்கள் இல்லை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள். பொதுக்குழு முடிவே இறுதியானது. பொதுக்குழு முடிவை மீறி செங்கோட்டையன் செயல்பட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன். ஜெயலலிதா இருந்தவரை, இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவர் டிடிவி தினகரன். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர், அதிமுக குறித்து பேச அருகதை கிடையாது.செங்கோட்டையன் கோடநாடு விவகாரம் குறித்து பேசியதைப் பார்த்தேன். கோடநாடு விவகாரத்தில், அதிமுக காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவரை எல்லாம் கட்சியில் வைத்திருந்தால் என்ன ஆகும்? அவருக்கு உள்ளுக்குள் எவ்வளவு வன்மம் இருந்திருக்கும். சட்டப்பேரவையில் திமுகவை எதிர்த்து, ஒரு வார்த்தை கூட செங்கோட்டையன் பேசியதில்லை. கட்சிக்கு எதிராக செயல்பட்டால், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.ஜெயலலிதா இருக்கும்போது செங்கோட்டையனின் அமைச்சர் பதவி, மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. நான் பொறுப்பேற்ற போது தான், செங்கோட்டையனை மீண்டும் அமைச்சராக்கினேன். ஓபிஎஸ் கட்சிக்கு உண்மையாக இல்லை. சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ், அவரது மகனும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்தார்கள். ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி செய்திருப்பார்களா? இப்படி கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களை எப்படி கட்சியில் இணைக்க முடியும்?ஓபிஎஸ் எப்படிப்பட்டவர் என்பதை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்பவர்கள் தான் ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றோர். திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர செங்கோட்டையன், தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் திட்டமிட்டு வருகின்றனர். அவர்கள் திமுகவின் ‘பி’ டீம், திமுகவிடம் சரணடைந்து விட்டனர். கட்சி விரோத செயலில் ஈடுபட்டதால் தான் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இபிஎஸ் தெரிவித்துள்ளார்.இதையும் பாருங்கள் - ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய இபிஎஸ் | EPS latest news | EPS | ADMK | EPSPressMeet