ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்தது. அந்த ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 26.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.அடுத்த சில நிமிடங்களில் 27 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு ரிஷப் பண்ட் லக்னோ அணிக்காக வாங்கப்பட்டது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றின் நேரடி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சும் அளவுக்கு அசத்தி வருகிறார். அதே போல டி20 கிரிக்கெட்டிலும் ஓரளவு நன்றாக விளையாடும் அவரை கேப்டனாக நியமிக்கும் நோக்கத்தில் லக்னோ இவ்வளவு தொகைக்கு வாங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும் 2008ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்ட ஜாம்பவான் எம்எஸ் தோனியின் சாதனையை அவரால் முறியடிக்க முடியவில்லை என்று சொல்லலாம். அதாவது வரலாற்றின் முதல் ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி எம்எஸ் தோனியை 1.5 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. அது அன்றைய இந்திய ரூபாயில் மிக பெரிய தொகை ஆகும் (43.51rs in 2008). மேலும் 2008 ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளுக்கும் அதிகபட்சமாக 5 மில்லியன் டாலர்கள் மட்டுமே வீரர்களை வாங்குவதற்காக பிசிசிஐ ஒதுக்கிய அதிகபட்ச பட்ஜெட் தொகையாகும். ஆனால் தற்போது ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் வீரர்களை வாங்குவதற்கு அதிகபட்சமாக 120 கோடிகளை பயன்படுத்த பிசிசிஐ அனுமதித்துள்ளது. அதன் படி 2008 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தங்களுடைய மொத்த தொகையில் 30% தோனி எனும் ஒரு வீரரை வாங்குவதற்காக மட்டுமே செலவழித்தது.ஆனால் தற்போது ரிஷப் பண்ட்டை வாங்குவதற்கு லக்னோ அணி தங்களுடைய மொத்த தொகையில் 22.30% மட்டுமே செலவழித்துள்ளது.ஒருவேளை அந்த அணி மொத்த தொகையில் தோனியை வாங்குவதற்கு போலவே 30% செலவழித்து இருந்தால் ரிஷப் பண்ட் 36 கோடிகளை சம்பளமாக பெற்று இருப்பார். அப்படி பார்க்கும் போது 2008லயே தோனி 36 கோடிக்கு சமமான சம்பளத்தை பெற்றுள்ளார்.அந்த வகையில் 27 கோடிக்கு வாங்கப்பட்டாலும் சதவீதத்தின் அடிப்படையில் தோனியின் சம்பளத்தை ரிஷப் பண்ட் தாண்ட முடியவில்லை என்றே சொல்லலாம். சொல்லப்போனால் தோனிக்கு அடுத்தபடியாக ஐபிஎல் வரலாற்றில் 2011, 2015 சீசனில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங்கை வாங்குவதற்கு கொல்கத்தா, டெல்லி தங்களது மொத்த தொகையில் தலா 26.7% செலவிட்டது.