இந்திய பாலிவுட் சினிமாவின் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவான பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா கேவல் கிரிஷன் தியோல், உடல் நலக்குறைவால் தனது 89ஆவது வயதில் காலமானார். மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அவரது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கடைசி மூச்சை விட்டார். இந்த செய்தி பாலிவுட் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாலிவுட்டில் 1960இல் ‘டில் பி தெரா ஹம் பி தெரே’ (dil bhi tera hum tere) என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், ‘ஷோலே’ (1975), ‘டி சைலண்ட்’ (1973), ‘சதி’ (1982) போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து, ‘ஹீ-மேன்’ என்ற பட்டத்தையும் பெற்றார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், தனது தனித்துவமான நடிப்பாலும், கவர்ச்சியான உருவத்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவருக்கு பிரகாஷ் கௌர், ஹேமமாலினி என இரு மனைவிகளும், நடிகர்கள் சன்னி தியோல், பாபி தியோல் உள்பட 6 வாரிசுகளும் உள்ளனர்.தர்மேந்திரா தியோலுக்கு 2012ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது. இதுமட்டுமின்றி திரைத்துறைக்கு அவர் ஆற்றிய மிகப்பெரிய பங்களிப்புக்காக, 1997ஆம் ஆண்டில் அவருக்கு ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா, இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், அமிதாப் பச்சன், ஷாருக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், அமீர் கான் உள்ளிட்டோர் கனத்த இதயங்களுடன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.மேலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து இவரின் இறுதிச் சடங்கு நடைபெற்ற பவன் ஹான்ஸ் தகன கூடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர். இதனால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.தர்மேந்திராவின் வாழ்க்கை, இந்திய சினிமாவின் தங்கப் பதிவேட்டில் குறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அவரது படங்கள் தலைமுறைகளைத் தொடர்ந்து ஈர்க்கும், என்றும் உறுதியாக நிற்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.