பிரிவதில் உறுதியாக இருப்பதாக தனுஷூம், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் குடும்ப நல நீதிமன்றத்தில் உறுதியுடன் கூறி விட்டதாக தகவல் வெளியான நிலையில், விவாகரத்து வழக்கின் தீர்ப்பு வருகிற 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.கோலிவுட்டில் தற்போது விவாகரத்து புயல் வீசிக் கொண்டிருக்கிறது என பேசும் அளவுக்கு, சமீப காலமாக திரை பிரபலங்கள் விவாகரத்து செய்வது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய முடிவெடுத்திருப்பதாக தனுஷ்-ஐஸ்வர்யா அறிவித்த போது, ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. திருமண முறிவை அறிவித்த தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி, விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தனர்.வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தாலும், விவாகரத்து முடிவில் இருந்து தனுஷும், ஐஸ்வர்யாவும் பின் வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இரு குடும்பத்தினரும் தனுஷ்ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. மகன்களின் எதிர்காலத்தை யோசித்து இருவரும் சேர்ந்து வாழவே முடிவு செய்து விட்டதாக தகவல்உலா வந்தது. அதனை உறுதிபடுத்தும் வகையில் ஐஸ்வர்யாவின் சமூக வலைதள பதிவுகளுக்க தனுஷ் லைக் போடுவது மாதிரியான நிகழ்வுகளெல்லாம் ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தன.முக்கியமாக, மகள் ஐஸ்வர்யா விவாகரத்து முடிவில் ரஜினிகாந்த்துக்கு துளியும் விருப்பமில்லை எனவும், தனுஷுடன் சேர்த்து வைக்க ரஜினி தீவிரமாக முயற்சித்து வருவதாக கூறப்பட்டது. ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக அறிவித்தாலும், ரஜினியின் கடைசி இரண்டு படங்கள் வெளியான போது முதல் நாள் முதல் ஷோவுக்கே தனுஷ் தியேட்டருக்கு வந்து பார்த்தார். தனுஷும், ஐஸ்வர்யா வும் மீண்டும் சேர்ந்து வாழ ரஜினி மீதான பாசம் தான் தொடக்கப்புள்ளியாக அமையும் என்ற தகவலும் வெளியானது. விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தாலுமே, மூன்று முறைக்கும் மேல் இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இதனால், இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை சுக்குநூறாக்கும் வகையில் சேர்ந்து வாழ விரும்பவில்லை எனநீதிமன்றத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன்பு ஆஜரான தனுஷ்-ஐஸ்வர்யாவிடம், பூட்டிய அறைக்குள் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய எடுத்த முடிவு உறுதியானது என்று கூறிய தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து வாழ விருப்பமில்லை எனக் கூறியதை அடுத்து, வழக்கின் தீர்ப்பு வருகிற 27-ந் தேதியன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். இருவரும் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என கூறியிருப்பதால், 27-ந் தேதியன்று தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கப்படு வதோடு, 2004ஆம் ஆண்டு நடந்த அவர்களது திருமணமும் செல்லாது என அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.