’சென்யார்’ புயல், தமிழகத்தை நிச்சயம் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அந்த புயல் எங்கு, எப்போது உருவாக வாய்ப்பு உள்ளது? அதன் திசை மற்றும் நகர்வு எவ்வாறு இருக்கும்? தற்போது, தென்மேற்கு வங்கக் கடலில் நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு நிலையை கூர்ந்து கவனிக்க வேண்டியிருப்பதாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்த ஹேமச்சந்திரன், அதுகுறித்த சில விவரங்களையும் தெரிவித்திருந்தார். இதன்படி, இம்மாத இறுதியில் உருவாகும் ’சென்யார்’ என்ற புயல், தமிழகத்தை தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறியிருந்தார். இப்புயல் மாத இறுதியில் தான் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதாகவும், புயலின் தீவிரம் மற்றும் அது துல்லியமாக எங்கு கரையைக் கடக்கும் என்பன உள்ளிட்டவற்றை கணிக்க முடியவில்லை என்றும் ஹேமச்சந்திரன் தெரிவித்திருந்தார். புயலுக்கு முன்பாக, தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையை கவனித்து வருவதாகவும், அது ஓரிரு நாட்களில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக, குமரிக்கடல்-மன்னார் வளைகுடா பகுதிகளில் குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகுமானால், தென் மாவட்டங்கள் & டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கூடுதலாக சென்னை உள்பட வட தமிழக பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், இதுவரை பெரிதாக மழை பெறாத உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை பரவலாகும் என கணித்திருந்தார் ஹேமச்சந்திரன்.