பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவரான மாதபி புச் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் சுமத்தியிருந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற பொது கணக்கு குழு, மாதபி புச்சிற்கு சம்மன் அனுப்பி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாதபி புச் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்கி வந்த நிலையில் நாடாளுமன்ற பொது கணக்கு குழு விசாரணைக்கு அழைத்துள்ளது.பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகாருக்கு உள்ளான செபி தலைவர் மாதபி புச்சிற்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் அக்டோபர் 24ம் தேதி நாடாளுமன்ற பொது கணக்கு குழு முன் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சில அதிகாரிகளும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர், வெளிநாடுகளில் அதானி முறைகேடாக வைத்துள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக, அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியது. மேலும் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதால் தான், அதானி மீது செபி தலைவர் மாதபி புச் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியது. இந்த புகார்கள் பூதாகரமாக வெடிக்க, செபி தலைவராக உள்ள மாதபி புச் ராஜினாமா செய்யவேண்டும் என்றும் அவரை விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் எனவும் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வந்தன. ஆனாலும் மாதபி புச் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருந்து வந்தது. இந்த சம்மனை தொடர்ந்து நாடாளுமன்ற பொது கணக்கு குழு முன்பு மாதபி புச் ஆஜராகும்பட்சத்தில் அவரிடம் சரமாரியான கேள்விகளை தொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பங்குச்சந்தையில் அதானி முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்த குற்றச்சாட்டை பாரப்பட்சமாக அணுகியது தொடங்கி, அதானியின் முறைகேடு நிறுவனத்தில் முதலீடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் வரை, நாடாளுமன்ற பொது கணக்கு குழு கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாடாளுமன்ற பொது கணக்கு குழுவின் நடவடிக்கைக்கு பாஜக உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அதில் நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி இருந்தால் மட்டுமே செபியின் செயல்பாடுகளை நாடாளுமன்ற பொது கணக்கு குழுவால் பகுப்பாய்வு செய்ய முடியும் என கூறியுள்ளனர்.மாதபி புச் மீது அடுக்கடுக்காக குவிந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. ஆனால் மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் வலியுறுத்துதல்களை ஏற்கவில்லை. இந்நிலையில் தற்போது கே.சி.வேணுகோபால் தலைமை வகிக்கும் நாடாளுமன்ற பொது கணக்கு குழு சம்மன் அனுப்பியிருப்பது மாதபி புச்சிற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்புகளும் மக்களிடம் அதிகரித்து உள்ளது.