ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை தீவிரமாக வலியுறுத்த முடிவு செய்திருக்கும் காங்கிரஸ், வரும் தேர்தலில் எளிதில் வெற்றி பெறக் கூடிய 125 தொகுதிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கூடுதல் தொகுதிகள் கேட்கும் காங்கிரஸின் நெருக்கடியை, திமுக எப்படி சமாளிக்க போகிறது? என்பது ஒரு பக்கம் இருக்க, பீஹார் தேர்தலுக்கு பிறகு கூட்டணி கணக்கில் முக்கிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.கடந்த சில நாட்களாகவே, கூட்டணி தலைமையான திமுகவுக்கு எதிராக காங்கிரஸில் போர்க்குரல் எழுந்து வருவது அதிகரித்து வருகிறது. தேர்தல் வெற்றிக்கு காங்கிரஸை பயன்படுத்திக் கொள்ளும் திமுக, மற்ற நேரங்களில் உரிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை என சமீப காலமாக காங்கிரசார் பேசி வருவதை பார்க்க முடிகிறது.’கரும்பு சாறை திமுக உறிஞ்சி விட்டு வெறும் சக்கையை தான் காங்கிரஸுக்கு கொடுக்கிறது’ என, கே.எஸ்.அழகிரியும், ’ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும்’ என எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் உள்ளிட்டோரும் பேசினர்.இந்த நிலையில், கடந்த வாரம் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸின் ஆலோசனைக் கூட்டத்தில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நீண்ட காலமாக, திமுக கூட்டணியில் பயணித்து வரும் காங்கிரஸ், இடையில் 2014 தேர்தலுக்கு மட்டும் தான் கூட்டணியில் இருந்து விலகியது. பின்னர், மீண்டும் 2016 தேர்தலுக்கு ஐக்கியமான காங்கிரஸ் அப்போதில் இருந்து தற்போது வரை திமுக கூட்டணியில் தான் இருந்து வருகிறது.இந்நிலையில், 2006 தேர்தல் போல 2026 தேர்தலை சந்திக்க வேண்டும் என பெரும்பாலான நிர்வாகிகள் விரும்பியதாக கூறப்படுகிறது. 2006 தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.ஆனால், அந்த தேர்தலில் திமுக வெறும் 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தனி பெரும்பான்மை இல்லாமல் போனது. காங்கிரஸ் கொடுத்த ஆதரவு தான் திமுக ஆட்சி அமைக்க காரணமாக இருந்தது என்ற நிலையில், அந்த சூழலிலும் கூட அமைச்சரவையில் பங்கு கேட்காமல் டெல்லி மேலிடம் கோட்டை விட்டது.இந்நிலையில், வருகிற தேர்தலிலும் 2006 தேர்தலை போன்று கூடுதல் தொகுதிகளை கேட்டு வாங்க காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறதாம். முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு சாத்தியமாகும் தொகுதிகள் என 125 தொகுதிகளை கண்டறிய சொல்லி மேலிட பொறுப்பாளரிடம் இருந்து நிர்வாகிகளுக்கு உத்தரவு வந்திருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு முறையும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும் தொகுதிகளே காங்கிரசுக்கு ஒதுக்கப்படுகிறது எனவும் சில நிர்வாகிகள் குறைபட்டு கொண்டதாக கூறப்படுகிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வலுவாக இருக்கும் தொகுதிகளில் திமுகவே நேரடியாக போட்டியிடாமல் காங்கிரஸ்-க்கு ஒதுக்குவது கதர்களை அதிருப்தியில் தள்ளியிருப்பதாக சொல்கிறார்கள்.ஆகையால், வருகிற தேர்தலில் எதிர்க்கட்சி பலமாக இருக்கும் தொகுதிகளை புறந்தள்ளி விட்டு, மற்ற தொகுதிகளை கேட்டு வாங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.அதுமட்டுமல்லாமல், வருகிற தேர்தலில் கட்டாயம் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வாங்க வேண்டும் எனவும் கிரிஷ் ஜோடங்கரிடம் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.மேலும், எம்.எல்.ஏ. பதவிகளை தாண்டி முக்கியமான வாரியங்களில் இருக்கும் நியமன பொறுப்புகளை கேட்டு பெறவும் காங்கிரஸ் திட்டம் வைத்திருக்கிறது.அதோடு, உள்ளாட்சி அமைப்புகளிலும் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறதாம்.வலுவிழந்து வரும் கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில், உள்ளாட்சியில் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தி கொடுக்க சொல்லி, திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆலோசனை கூட்டம் தொடங்கியதுமே நிர்வாகிகள் சிலர் விஜய் குறித்தும், த.வெ.க. குறித்தும் பேச முற்பட்ட நிலையில், அவர்களை அப்படியே ’ஆப்’ செய்த மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், கூட்டணி குறித்த முடிவுகளை பீஹார் தேர்தல் முடிந்ததும் டெல்லி மேலிடம் கவனித்துக் கொள்ளும் என்றும், கட்சி பணிகளை மட்டும் கவனியுங்கள் எனவும் கறாராக கூறி விட்டாராம்.ஆகையால், பீஹார் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் கூட்டணி நிலைப்பாட்டில் காங்கிரஸ் முக்கிய முடிவு எடுக்கும் என்கிறது சத்தியமூர்த்தி பவன் வட்டாரம்.இதையும் பாருங்கள் - ஆட்சியில் பங்கு - திமுகவை நெருக்கும் காங். - 2006 மாடலில் 2026க்கு டார்கெட் | Congress DMK