அமெரிக்க டாலருக்கு இணையான கிரிப்டோ கரன்சி தேவைப்படுவதாக கூறி ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான டாலரை பெற்றுக்கொண்டு கலர் ஜெராக்ஸ் பணத்தை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ஆன்டனி செல்வன் என்பவர் பெருமாள்புரம் ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் ஆன்லைன் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருவதுடன் வெப் டிசைனிங் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 24ஆம் தேதி பெருமாள்புரம் காவல் நிலையத்தில் கிரிப்டோ கரன்சி பண பரிவர்த்தனையில் ஏமாற்றப்பட்டதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கு அறிமுகமான முகம்மது ரியாஸ் என்பவர் மூலம் போரக்ஸ் டிரேடர்ஸ் என அறிமுகம் செய்யப்பட்ட அய்யாதுரை, இசக்கிமுத்து ஆகியோர் தங்களுக்கு அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்ட கிரிப்டோ கரன்சி தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.அதன்படி ரூபாய் 75 லட்சம் மதிப்பில் 82,691 அமெரிக்க டாலர் கிரிப்டோ கரன்சியை முகமது ரியாஸின் மின்னணு பணப்பைக்கு எலக்ட்ரானிக் வேலட் மூலம் மாற்றம் செய்து அதற்கான பணம் ரூபாய் 75 லட்சத்தினை ஆண்டனியிடம் அவர்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது.பணத்தை பெற்று கொண்டு அதை எண்ணிப் பார்த்தபோது அவை அனைத்தும் கலர் ஜெராக்ஸ் என தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து கலர் ஜெராக்ஸ் பணத்துடன் புகார் தெரிவித்துள்ளார்.மேலும் பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டை செய்து வந்த நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட முகமது ரியாஸ், அய்யாதுரை மற்றும் இசக்கி முத்து ஆகிய மூவரை புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, முகமது ரியாஸ் மின்னணு பணப்பையில் இருந்த ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான 82691 அமெரிக்க டாலருக்கு இணையான கிரிப்டோ கரன்சியை பறிமுதல் செய்துள்ளனர்.