கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே மத்திய அரசின் நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவது தொடர்பாக திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ராமன்தொட்டி பகுதியில் மத்திய அரசின் நிதியின் கீழ் 15 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு கே.பி. முனுசாமி அடிக்கல் நாட்டுவார் என அதிமுவினரால் பேனர் வைக்கப்பட்டது. இதையடுத்து திட்டத்தை தொடங்கி வைக்க கே.பி.முனுசாமி வந்தபோது அவரை சூழ்ந்த திமுகவினர் நாங்கள் தான் திட்டங்தை தொடங்கி வைப்போம் என அவருடன் வாக்குவாதம் செய்ததோடு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.