தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய வள்ளுவன் பிறந்த தமிழக மண்ணில் சாதி இல்லை என்பதே அடிப்படையாக இருந்தது. உலகம் அறிவு மயம் ஆகிறது. ஆனால், அன்பு மயம் ஆவதை தடுக்கிறது. சில சம்பவங்கள் சமுதாயத்தை தலைகுனியச் செய்கிறது. ஆணவப் படுகொலைக்கு ஜாதி மட்டும் காரணம் இல்லை.எதற்காக நடந்தாலும் கொலை, கொலை தான். அனைத்து வகையான ஆதிக்க மனோ பாவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சமூகங்களின் பெயர்களில் 'ன்' விகுதியை நீக்கி 'ர்' என மாற்ற சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமரை சந்தித்தபோது கோரிக்கையை முன்வைத்தேன். எதற்காகவும் ஒருவரை, மற்றொருவர் கொல்வதை நாகரிக சமூகத்தில் ஏற்க முடியாது. அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.ஆதிக்க எதிர்ப்பும், சமத்துவ சிந்தனையும் கொண்ட சுய மரியாதையும், அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பிரச்சாரத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை.சீர்திருத்தப் பிரசாரத்தையும், குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்க வேண்டும். ஜாதி ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்துக்கான பரிந்துரை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்.சட்ட வல்லுநர், முற்போக்கு சிந்தனையாளர், மானுடவியல் அறிஞர் கொண்ட இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துக்களை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். இதன் அடிப்படையில் தமிழக அரசு ஆணவ படுகொலையை தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்ற, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.