கிராம சபை கூட்டத்தில், காணொலி காட்சி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டின் முதுகெலும்பாக இருப்பவை கிராமங்கள் தான் என மகாத்மா கூறியதை நினைவு கூர்ந்து உரையாற்றினார். கிராம சபை கூட்டத்தில், காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாட்டின் முதுகெலும்பு, கிராமங்கள். கிராமங்களில் தான், இந்தியா வாழ்கிறது. கிராம பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம். 10 ஆயிரம் கிராமங்களை இணையம் மூலம் இணைத்து முதல் முறையாக கிராமசபை கூட்டம் நடக்கிறது. இந்தியாவில் எந்த முதல்வரும் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றதில்லை. முதல்வராக 3ஆவது முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன்.கிராம சபைக் கூட்டங்கள், ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் தருணம். கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். இதற்காகத் தான் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இது, கிராமங்களின் தேவை, வளர்ச்சி இலக்கு, நலன் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றும் விழா. குடியிருப்பு, சாலை, தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கிராம சபையில் மக்கள் ஆலோசித்து 3 முக்கிய தேவைகளை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். குடிசையில்லா தமிழ்நாடு இலக்கை எட்ட இதுவரை 99,453 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. கிராமப்புற முன்னேற்றத்தை சாத்தியப்படுத்தியது சுய உதவி குழு திட்டம். மகளிர் சுய உதவி குழுக்களின் அடுத்த கட்ட பாய்ச்சல் தான் மகளிர் உதவித்தொகை. மகளிருக்கான விடியல் பயணத்திட்டம், பெண்கள் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளை தொழிலாளர்களாக ஈடுபடுத்தினால் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் கூறி, மீட்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களை சரி செய்தால் பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்படும். பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஊராட்சிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பணத்தை தண்ணீராக செலவழிப்பதாக சொல்வார்கள். ஆனால், தண்ணீரை தான் பணம் போல் பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.கிராமங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் யாருக்கும் அலட்சியம் கூடாது.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.