லண்டனில், இங்கிலாந்து அமைச்சர் Catherine West உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டிற்கான நிலையான பொருளாதாரத்திற்கு இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்ததாக அவர் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவில் கூறி இருப்பதாவது:தமிழகம், பிரிட்டன் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினேன். கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, கடல்சார் துறைகளில் உள்ள வாய்ப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஐடி உற்பத்தி துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குவதை அமைச்சரிடம் எடுத்து கூறினேன். பொருளாதார வளர்ச்சியை கட்டமைப்பதில் பிரிட்டன் ஒத்துழைப்பு அளிக்குமாறு அமைச்சர் கேத்தரினுக்கு அழைப்பு விடுத்தேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பிரிட்டன் அமைச்சரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசி உள்ளார்.