சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில், செவிலியர்கள் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 400க்கும் மேற்பட்டோரை போலீசார் தடால் அடியாக கைது செய்தனர். அகிம்சை முறையில் போராடும் தங்களை கழிவறைக்கு கூட செல்லவிடாமல், அடித்து அராஜகமாக கைது செய்ததாக, கண்ணீருடன் பேசிய செவிலியர், பெண்கள் எனும் பாராமல் நள்ளிரவில் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதாக ஆதங்கப்பட்டார். காவல்துறையை விட இரும்பு நெஞ்சம் கொண்ட செவிலியர்கள், நிச்சயம் அடக்குமுறைகளை தாங்குவோம் என, ஆவேசமாக அவர் பேசினார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில், தூய்மை பணியாளர்கள் தொடங்கி செவிலியர்கள் வரை போராட்டத்தை ஆயுதமாக கையில் எடுத்திருப்பது அரசுக்கு சிக்கலை தான் ஏற்படுத்தியிருக்கிறது.தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தரம், பட்டப்படிப்பு செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு, அரசு செவிலியர் கல்லூரிகள் உள்ளிட்ட வாக்குறுதிகளை கடந்த தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆட்சி முடியும் தருவாயில் போராட்டக் களத்தில், செவிலியர்கள் இறங்கியுள்ளனர். இந்த 10 அம்ச கோரிக்கைகளுடன் சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீட்டை கைவிட வேண்டும் என்றும் செவிலியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், சென்னை சிவானந்தா சாலையில், உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. அங்கிருந்து கைது செய்யப்பட்ட அவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்படவே, அங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கேயும் போராட்டத்தில் ஈடுபட விடாமல் செவிலியர்களை கைது செய்து விடுவிக்கப்பட்ட நிலையில் கடந்த 20ஆம் தேதி முதல் கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே துறையின் அமைச்சரான மா.சுப்பிரமணியன் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது. எங்கேயும் போராடவிடாமல் செவிலியர்கள் பந்தாடப்படும் நிலையில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான கழிவறை வசதியில்லாததும், படுத்துறங்குவதற்கான இடவசதியும் இல்லாததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செவிலியர்கள் வருகின்றனர். அதன்படி அங்கு ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் கூடுவாஞ்சேரிக்கு புறப்பட்ட செவிலியர்களை போலீசார் மடக்கி கைது செய்தனர். 400க்கும் மேற்பட்ட செவிலியர்களை மடக்கி போலீசார் கைது செய்த நிலையில், அகிம்சை முறையில் போராடும் தங்களை அராஜக போக்குடன் கைது செய்து வருவதாக செவிலியர் ஆதங்கப்பட்டார். கைதுக்கு கூட ஒத்துழைப்பு கொடுக்கும் தங்களை அடைத்து வைத்திருந்த தனியார் மண்டபத்திலிருந்து நள்ளிரவில் பெண்கள் என்றும் பாராமல் கழுத்தை பிடித்து வெளியே தள்ளியதாக வேதனைப்பட்ட அவர், இவர்கள் தான் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குபவர்களா? என ஆவேசப்பட்டார். மாதவிடாய் சமயத்தில் கூட கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கவில்லை என ததும்பிய கண்ணீருடன் அவர் வேதனையை கொட்டினார். இருப்பினும் கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300 செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுவர் ஏறி குதித்து உள்ளே செல்ல முயன்ற செவிலியர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். உள்ளே எவரும் செல்ல முடியாத வகையில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தனர். தமிழகத்தின் தலைநகரம் மட்டுமில்லாமல், தூத்துக்குடி, சேலம், நெல்லை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அரசு எதிராக போர்க்கொடியை உயர்த்தியுள்ளனர். தூய்மை பணிகளை தனியார்மயப்படுத்துவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், ஆட்சி முடிவதற்குள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ள பல தரப்பினரும் போராட்ட களத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.