திமுக அரசு பொறுப்பேற்று இறுதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், இறுதி முழு பட்ஜெட் என்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் 4.12 லட்சம் கோடிக்கு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் நிதிப்பற்றாக்குறை ரூ.94,060 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.52 ஆயிரம் கோடி, நகர்புற வளர்ச்சி துறைக்கு ரூ.41 ஆயிரம் கோடி, ஊரக வளர்ச்சி துறைக்கு 27 ஆயிரம் கோடி, எரிசக்தி துறைக்கு 21 ஆயிரம், மக்கள் நல்வாழ்வு துறைக்கு 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த துறைகளில் முக்கியமாக தமிழ் புதல்வன்,வட சென்னை வளர்ச்சி திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மட்டும் கடந்த நிதியாண்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கடும் சவால்களுக்கு மத்தியில் 2025 – 2026 நிதியாண்டுக்கான நிதி அறிக்கை வரும் மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக அரசின் கடைசி முழு நிதி நிலை அறிக்கை என்பதால் இந்த நிதிநிலை அறிக்கையில் பல மக்கள் நல திட்டங்களை அறிவிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஆனால், மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு அளிக்க வேண்டிய நிதியை தராமல் உள்ளது. இதன் காரணமாக அனைத்து திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக புதியக் கல்வி கொள்கையை ஏற்காத காரணத்தால் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதன் காரணாக கல்வித்துறைக்கு வரும் நிதியாண்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. மேலும், அனைத்து பெண்களும் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா என்று எதிர்பார்த்து கொண்டு உள்ளனர். ஏற்கனவே கடந்த நிதியாண்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மிக முக்கியமாக பேரிடர் நிவாரண பணிகளுக்கான மிக மிக குறைந்த தொகையை மட்டுமே மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. நேற்று கூட பல மாநிலங்களுக்கு பேரிடர் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிலையில், தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. ஒவ்வொரு வருடம் தமிழகத்தில் இயற்கை பேரிடர் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இதற்கான நிவாரணத் தொகையும் தமிழ்நாடு அரசே தனது சொந்த நிதியில் இருந்து செலவு செய்து வருகிறது. பெஞ்சல் புயல் காரணமாக 18 மாவட்டங்கள் பாதிப்புகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாடு அரசு செலவு செய்துள்ளது. இப்படியாக, மாநில நிதியில் இருந்து தொடர்ச்சியாக செலவு செய்து வரும் நிலையில், அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை செயல்படுத்த தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.ஆனால், மாநில அரசு நிதிச்சுமை அதிகமாகி கொண்டே உள்ளதால், பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கூட வழங்க முடியாத நிலையில் உள்ளதால், புதிய திட்டங்களை அறிவிப்பதில் அரசுக்கு மிகப் பெரிய சவால் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் மார்ச் 14ம் தேதி திமுக அரசின் தேர்தலுக்கான முன்னோட்ட அறிவிப்புகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு சலுகை அறிவிப்பதில் எந்த அளவுக்கு செயல்பட்டு சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா என்பது வரும் மார்ச் 14ம் தேதி தெரிந்து விடும்.நியூஸ் தமிழ் செய்திகளுக்காக பாரி கார்த்திகேயன்.