பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அலுவலகத்தில் இருந்து, சிபிஐ அதிகாரி வெளியேறிய வேகத்தில், செய்தியாளர்களை சந்தித்த தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், நடந்தவை குறித்து விளக்கி உள்ளார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தவெக பரப்புரையின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், இந்த விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை நியமித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து, வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்ட நிலையில், உச்சநீதிமன்றமோ சிபிஐக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், அக்டோபர் 17ஆம் தேதி, கரூர் துயர சம்பவத்தை சிபிஐ தனது கையில் எடுத்தது. குறிப்பாக, கடந்த சில தினங்களாக கரூரில் விசாரணையை தீவிரப்படுத்தினர் சிபிஐ அதிகாரிகள். இதனிடையே தான், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்த சிபிஐ அதிகாரி விசாரணை மேற்கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், சிசிடிவி காட்சிகள் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் விவரங்களை கேட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி நிரல் உட்பட யாரெல்லாம் பங்கேற்றார்கள் என்ற விவரத்தோடு சிசிடிவி ஆவணங்களை ஒப்படைக்க சிபிஐ அதிகாரி, சம்மன் வழங்கியதாகவும் தெரிகிறது. விசாரணை முடிந்து, சிபிஐ அதிகாரி புறப்பட்ட வேகத்தில், செய்தியாளர்களை சந்தித்த சிடிஆர் நிர்மல்குமார், நடந்தவை குறித்து விளக்கினார். கரூர் துயர சம்பவத்தில், கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ-ன் FIR-லும், இவர்களின் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், அது சார்ந்த சம்மன் ஏதும் வழங்கப்படவில்லை என்றும், தவெக தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது. அழைக்கும் பட்சத்தில் நேரில் ஆஜராகி நடந்தவை குறித்து விளக்குவோம் என்று கூறி முடித்திருக்கிறார் சிடிஆர் நிர்மல்குமார்.இதையும் பாருங்கள் - CBI விசாரணை, பனையூரில் நடந்தது என்ன? பரபரப்பாக பேசிய நிர்மல் | TVK Vijay | TVK office