டெல்லி செங்கோட்டை அருகே, திடீரென கார் வெடித்து சிதறிய சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் சிக்னலில் நின்று கொண்டிருந்த ஹூண்டாய் ஐ20 மாடல் கார் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அதன் அருகில் இருந்த 4 வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உடல் சிதறியும், தீயில் கருகியும் பலியாகினர். மேலும், காயமடைந்த பலர் அருகில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கார்கள் வெடித்து சிதறிய சத்தம், இரண்டரை கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டதாக கூறப்படும் நிலையில், காரின் கதவு உள்ளிட்ட பாகங்கள் பல அடி தூரம் வரை பறந்து சென்று விழுந்து கிடந்தன.