இனிமேல் யாரும், சிறையில் இருந்து கொண்டே ஆட்சி செய்ய முடியாது என்று, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமரின் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விளக்கம் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பீகார் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:ஊழலை ஒழிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முன்னெடுப்பு இது. இனி, சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது.அரசு அதிகாரி ஒருவர், சிறையில் அடைக்கப்பட்டால், அடுத்த 50 மணி நேரத்தில் அவரது வேலை பறிபோகிறது. ஆனால், ஒரு முதல்வர், அமைச்சர், ஏன் பிரதமர் கூட சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்தலாம். சில நாட்களுக்கு முன்னர், நாம் சிறையில் இருந்து அரசு உத்தரவுகள் பறந்ததைப் பார்த்தோம். தலைவர்களுக்கு இதுபோன்ற மனப்பான்மை இருந்தால், ஊழலை எப்படி ஒழிப்பது? இதனால் தான், ஊழலுக்கு எதிரான இந்த புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். இந்த வரம்புக்குள் பிரதமரும் வருகிறார்.ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்லும் அரசியல்வாதிகள் தங்களது பதவிகளை இழக்க வேண்டும். ஆனால், இந்த மசோதாவுக்கு ஊழல் அரசியல்வாதிகளே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இந்த மசோதாவை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , இடதுசாரிகள் எதிர்க்கின்றன. இவ்வாறு பிரதமர் பேசினார்.