தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. விலையைக் கேட்டாலே தலை சுற்றும் அளவுக்கு, இப்போது, 95,000 ரூபாயை தாண்டி விட்டது, ஒரு சவரன் தங்கம் விலை. ஒவ்வொரு நாளும், காலை, மாலை என்று அறிவிக்கப்படும் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நடுத்தர மக்களுக்கு, இது பெரும் தலைவலியாக மாறி விட்டது. தங்கம் தான் இப்படி விலை உயர்கிறது என்றால், வெள்ளி வாங்கலாம் என்று பார்த்தால், வெள்ளி விலையும் போட்டி போட்டு ஏறிச் செல்கிறது. இந்நிலையில், வெள்ளியில் முதலீடு செய்வது நல்லது என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் வெள்ளி ஒரு கிராம் ரூ.103க்கு விற்கப்பட்டது. 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.98. வெள்ளியின் விலை இது போலத்தான் இருக்கும், தங்கம் தான் உயர்ந்து கொண்டே போகும் என்று மக்கள், தங்களின் கவனத்தை தங்கத்தின் பக்கம் திருப்பி, வெள்ளியை கண்டுகொள்ளவில்லை. ஆனால், தற்போது ஜெட் வேக வெள்ளியின் விலையேற்றம் மேலும் தலை சுற்ற வைக்கிறது. பிப்ரவரி மாத தொடக்கத்தில ஒரு கிராம் வெள்ளி ரூ.107. ஏப்ரல் மாதம் ரூ.114, ஜூலையில் ரூ.120. இடைப்பட்ட காலங்களில் வெள்ளியின் விலை சற்று குறைந்தாலும், செப்டம்பர் மாதத்துக்கு பிறகு, வெள்ளி விலை உயர்ந்து கொண்டே சென்றது. செப்டம்பர் 1ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.136, அக்டோபர் 1ஆம் தேதி ரூ.161 என புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து, வெறும் 14 நாட்களில் மேலும் விலை அதிகரித்து, ரூ.206 ஆனது. கடந்த ஓராண்டில் மட்டும் 110 சதவீதம் அளவுக்கு வெள்ளியின் விலை அதிகரித்தது. இதற்கு என்ன காரணம்? முன்பெல்லாம் பூஜை பொருட்கள், பாத்திரங்கள், அணிகலன் போன்றவற்றுக்கு தான் வெள்ளி பயன்படும். தற்போது தொழில்துறையில் அதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இதே மாதிரி, தங்கத்தில் முதலீடு செய்கிற மாதிரி, இப்போது பலரும், வெள்ளியில் முதலீடு செய்கின்றனர். இதனாலும் வெள்ளி விலையேற்றம் ஏற்படுகிறது. முன்பெல்லாம், பணம் கொடுத்ததும் easy ஆக வெள்ளி கட்டிகளை வாங்கி விடலாம், ஆனால் இப்போது தேவை அதிகரித்து இருப்பதால், முன்பதிவு செய்து 10,15 நாட்களுக்கு அப்பறம் தான் வெள்ளி கட்டிகள் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது. வரும் நாட்களில், வெள்ளி கிராமுக்கு ரூ.300, அதாவது கிலோவுக்கு ரூ.3 லட்சம் வரை விலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மக்கள் கலக்கத்தில் இருந்தாலும், இப்பவே முடிந்த அளவு வெள்ளியில் முதலீடு செய்யலாம் என்று, அறிவுறுத்துகின்றனர், வல்லுனர்கள்.