ராஜஸ்தான் மாநிலம், புஷ்கரில் நடக்கும் வருடாந்திர கால்நடை கண்காட்சியில், 23 கோடி ரூபாய் மதிப்பிலான எருமையும் 15 கோடி ரூபாய் மதிப்பிலான குதிரையும், பலரையும் கவர்ந்து வருகின்றன. புஷ்கர் கால்நடை கண்காட்சியை பார்க்க, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் அங்கு சண்டிகரை சேர்ந்த கேரி கில் என்பவருக்கு சொந்தமான ஷாபாஸ் என்ற இரண்டரை வயதான குதிரை, அனைவரையும் கவர்ந்து வருகிறது.இந்த குதிரையின் மதிப்பு 15 கோடி ரூபாய் என அதன் உரிமையாளர் கூறுகிறார். இதுவரை 9 கோடி ரூபாய் வரை விலை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே போன்று ராஜஸ்தானை சேர்ந்த அமோல் என்ற பிரம்மாண்டமான எருமையும் பலரையும் கவர்ந்து வருகிறது.ஒரு இளவரசன் போல வளர்க்கப்பட்டு வரும் இந்த எருமையின் விலை 23 கோடி ரூபாய் என அதன் உரிமையாளர் தெரிவித்தார். இந்த எருமைக்கு தினமும் பால், உலர் பழங்கள் மற்றும் நெய் போன்றவை உணவாக வழங்கப்படுகிறது.