சென்னை அருகே, போரூரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொன்ற வழக்கில், இளைஞர் தஷ்வந்த்-க்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவரை வழக்கில் இருந்து விடுவித்தும், உத்தரவிட்டுள்ளது.வழக்கின் பின்னணியை பார்க்கலாம்...கடந்த 2017ஆம் ஆண்டு, சென்னையை அடுத்த போரூரில், 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் இருந்த தஷ்வந்த் என்ற இளைஞர், பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் எரித்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தை சுட்டிக்காட்டி, தஷ்வந்த் ஜாமின் கேட்க, சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.அதன் பின்னர், வீட்டில் இருந்த தனது தாயை அடித்துக் கொன்று விட்டு, நகைகளுடன், தஷ்வந்த் மும்பைக்கு பறந்தார். பலகட்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு, தஷ்வந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், 2018ஆம் ஆண்டு தஷ்வந்த்-க்கு மரண தண்டனை விதித்தது.தாயை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், தஷ்வந்த்-ன் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, செங்கல்பட்டு நீதிமன்றம் விடுவித்தது. ஆனால், சிறுமி வழக்கில், மரண தண்டனையை உறுதி செய்ததால், அதை எதிர்த்து, தஷ்வந்த் தரப்பில் உச்சநீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன.?இந்நிலையில், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, தஷ்வந்த்-ஐ உச்சநீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள், மரபணு பரிசோதனை ஒத்துப்போக வில்லை என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளனர்.தனது தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.