புதுக்கோட்டையில் காதலியே காதலனை ஆட்கள் வைத்து தாக்கிய சம்பவத்தில் இளைஞர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ் குளவாய்பட்டி அருகே உள்ள மாயனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவரது மகன் கார்த்திக் ஆலங்குடி சாலையில் உள்ள பேக்கரியுடன் செயல்படக்கூடிய காபி ஷாப்பில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இதே காபி ஷாப்பில் அய்யானர்புரத்தைச் சேர்ந்த சந்தியா என்கிற பெண்ணும் பணிபுரிந்து வந்த நிலையில் இருவருமே நட்பாக பழகி வந்துள்ளனர்.கடந்த மூன்று மாதங்களாக கார்த்திக் சந்தியாவிடம் காதலிப்பதாக கூறிய நிலையில் சந்தியா காதலுக்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கார்த்திக் விடாமல் சந்தியாவிற்கு லவ் டார்ச்சர் கொடுத்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் சந்தியா கார்த்திக்கின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் கார்த்திக் காதலை முறித்துக் கொண்டு, சந்தியாவிடம் இருவரும் பிரிந்து விடலாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தியா கார்த்திக்குடன் தகராறில் ஈடுபட்ட நிலையில் கார்த்திக் அவரது முடிவில் தெளிவாக இருந்துள்ளார். இதனால் இன்னும் காதலன் மீது ஆத்திரமடைந்த சந்தியா அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் என சொல்லப்படும் சிவ ஸ்ரீ, பத்ம கணபதி எனபவரிடம் சந்தியாவிற்கும் - கார்த்திக்கிற்கும் இடையே இருந்த தொடர்பை எடுத்து கூறியுள்ளார்.மேலும் என்னை வேண்டாம் என கூறி உதறிதள்ளிவிட்டு சென்ற காதலன் கார்த்திக்கை என் கண் முன்னே ஆட்களை வைத்து அடிக்க வேண்டும் என்றும் கூறி , அதற்கு பணம் தருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு கணபதி பணம் எல்லாம் வேண்டாம் என கூறிய நிலையில், சந்தியா நான் பணம் தருகிறேன் என கூறி முதல் தவணையாக ஜி பே மூலம் 500 ரூபாயும் பிறகு இரண்டாவது தவனையாக 300 ரூபாய் என பிரித்து கணபதியின் அக்கவுண்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் சம்பவத்தன்று வழக்கம்போல் கார்த்திக்கும், சந்தியாவும் பணி முடிந்து இரவு வீட்டுக்கு கிளம்ப தயாரன போது சந்தியா தனது நண்பர் கணபதியை தொடர்புகொண்டு வரவழைத்துள்ளார். அப்போது கணபதி சந்தியாவிடத்தில் இங்கு இருந்தால் பிரச்சனை ஆகிவிடும் அதனால் நீ வீட்டுக்கு கிளம்பிவிடு என கூறி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு தனது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து கார்த்திக்கை follow செய்துள்ளனர். அப்போது கைக்குறிச்சி அருகே உள்ள அழகாம்பாள்புரம் பகுதியில் வழிமறித்த கணபதி மற்றும் அவரது நண்பர்கள் என மூன்று பேரும் சேர்ந்து பேர் கார்த்திக்கை சரமாரியாக தாக்கி விட்டு அவரிடமிருந்த மொபைல் போன் செயின் உள்ளிட்டவற்றை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த கார்த்திக் அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நிலையில் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை செய்து வந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட கணபதி உள்ளிட்ட முன்று பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் கார்த்திக்கின் காதலி சந்தியா காதலனை தாக்குவதற்கு திட்டமிட்டு நண்பர்களுக்கு பணம் கொடுத்து ஏவிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து மூன்று இளைஞர்களையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் இளைஞரை தாக்க ஆள் அனுப்பிய காதலி சந்தியாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.