சென்னை, மதுரை உயர் நீதிமன்றத்திற்கு ஒரே நேரத்தில் வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அண்மை நாட்களாக, சென்னையில் அரசியல் தலைவர்களின் இல்லம், அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. நேற்று முன் தினம் ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையம், கடற்படை உணவகம், மத்திய அரசு நிறுவனங்கள், அதிமுக தலைமை அலுவலகம் என, பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தன. இன்று, உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக நீதிமன்றத்தில் இருந்த பொது மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற அமர்வு உள்ளிட்ட முக்கியமான இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிட்டுள்ளது. உடனடியாக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதற்கு முன்னதாக, சென்னை சிபிஐ நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என 5ஆவது முறையாக வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வரும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.