சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் இனப்பெருக்கதற்காக குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள் வழக்கத்திற்கு மாறாக மரத்தின் உச்சியில் கூடு கட்டி முட்டையிட்டுள்ளது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. பெருமழை மற்றும் வெள்ள பெருக்கின் அறிகுறியை பறவைகள் உணர்த்துகிறதா ? இனப்பெருக்கத்திற்காக கொள்ளுக்குடிபட்டி கண்மாய்க்கு வந்த வெளிநாட்டு பறவைகள் கூடு கட்டி முட்டையிட்டு, குஞ்சு பொறித்துள்ள கழுகு பார்வையின் பிரத்யேக காட்சிகள் தான் இவை. சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி, பெரிய கொள்ளுக்குடிப்பட்டி,சின்ன கொள்ளுக்குடிபட்டி ஆகிய 3 கண்மாய்களில் 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பா், அக்டோபர் மாதங்களில் இன பெருக்கத்திற்காக ஆசிய , ஐரோப்பிய நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இந்த சரணாலயத்திற்கு வரும் 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பறவைகள் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்து, மீண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குஞ்சுகளுடன் தங்களது தாயகத்திற்கு திரும்பிச் செல்லும். பறவைகளுக்காக இந்த காலக்கட்டங்களில் வரும் தீபாவளி பண்டிகை, திருமணம் உள்ளிட்ட எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளுக்கு கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் பட்டாசுகளே வெடிப்பதில்லை என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தென்மேற்கு பருவமழையால் சரணாலயங்கள் பசுமை போா்த்தி காணப்படும் நிலையில், சீசன் காலத்திற்கு முன்பே கடந்த ஜூலை மாதமே பறவைகள் வரத் தொடங்கின. சாம்பல் கூழைக்கடா, சின்ன சீழ்க்கைச் சிறகி, நீலச்சிறவி, நத்தை குத்தி நாரை, நாமக்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக் கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை, உண்ணிக்கொக்கு, பாம்புத்தாரா, சிறிய நீர்க்காகம், முக்குளிப்பான் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ள நிலையில் அவைகள் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிக்க தொடங்கியுள்ளன.கடந்த காலங்களில் மரக்கிளைகளின் உள்பகுதிகளில் கூடுக்கட்டி குஞ்சு பறித்த பறவைகள் தற்போது வழக்கத்திற்கு மாறாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டைகள் இட்டு குஞ்சுகள் பொறித்துள்ளது. இதுபோன்ற பறவைகளின் வழக்கத்திற்கு மாறான செயல்கள் அதீத கனமழை, பெருவெள்ளத்திற்கான அறிகுறியாக இருக்கும் என தங்கள் முன்னோர்கள் கூறியுள்ளதாக அச்சம் தெரிவிக்கும் விவசாயிகள் 2004 ல் அப்பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை நினைவு கூர்ந்தனர். வயநாட்டில் நிலச்சரிவு நடப்பதற்கு முன்னரே விலங்குகள் இடம் பெயர்ந்ததை சுட்டிக்காட்டிய விவசாயிகள் பறவைகளின் இந்த செயலை மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகமும் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்கின்றனர். இந்த வாரத்தில் இன்னும் அதிக பறவைகள் வரலாம் என கூறும் பறவைகள் ஆர்வலர்கள், வடகிழக்கு பருவமழைக்கு முன்னே பறவைகள் வந்து கூடுகட்டி வசிப்பதால் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.