பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள், களப்பணியில் தீவிரமாக உள்ளன. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு, இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 11ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.தற்போதைய முதல்வர் நிதீஷ் குமாரை, ஆளும் கட்சியான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. மறுபுறம் காங்கிரஸ் மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (RJD) அங்கம் வகிக்கும் அணியான "மகாகட்பந்தன்' அதன் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவை அறிவித்துள்ளது.2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 17 இடங்களிலும், ஜேடியூ 16 இடங்களிலும் போட்டியிட்டன. அதுவே 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஜேடியூ 25 இடங்களிலும் பாஜக 15 இடங்களிலும் போட்டியிட்டன. 2020 சட்டமன்றத் தேர்தலில் ஜேடியூ 115 இடங்களிலும் பாஜக 110 இடங்களிலும் போட்டியிட்டன. பாஜகவைவிட அதிகமான இடங்களில் போட்டியிட்டாலும் ஜேடியூ 45 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், பீகாரில் 20 ஆண்டுகளாக பெரிய கட்சியாகப் பார்க்கப்பட்ட ஜேடியூ, தன்னுடைய 'பெரிய அண்ணன்' அந்தஸ்தை இழப்பதாக அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் கருதுகின்றனர்.பீகாரைச் சேர்ந்த முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்கிற கட்சியைத் தொடங்கி தனியாக தேர்தலைச் சந்திக்கிறார். அனைத்து இடங்களிலும் போட்டியிடும் ஜன் சுராஜ் கட்சி, வாக்காளர்களிடம் பி.எல்.சி. என்கிற குடும்ப நல அட்டையை விநியோகித்து வருகிறது. தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் நிதீஷ் குமார் அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை கடந்த 2023ஆம் ஆண்டு, அக்டோபரில் வெளியிட்டது. அதன்படி, மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் ஓபிசி மற்றும் இபிசி வகுப்பினர் 63 சதவீதம் உள்ளனர். பட்டியலினத்தவர் 19.65 சதவீதமும், பழங்குடியினர் 1.68 சதவீதமும் உள்ளனர்.சில தரவுகளின்படி, தேஜஸ்வி சார்ந்த யாதவர் சமுதாயம், அதாவது ஓபிசி வகுப்பு 14.27 சதவீதமாக உள்ளது. பீகார் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்திய உயர் வகுப்பினரான ஓபிசி, 2023ல் மாநில அரசால் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் 15.5 சதவீதம் உள்ளதாக தரவுகளில் தெரிய வந்துள்ளது. அந்த வகையில் யாதவர் சமுதாயத்தின் எண்ணிக்கை சற்று சரிந்துள்ளது.இந்நிலையில், உயர் வகுப்பினருக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுத்து அவர்களின் வாக்கு வங்கியைக் கவர முற்படும் பாஜகவுக்கு இந்தத் தேர்தல் சற்று சவாலானதாக இருக்கும் என்று, அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், ஒவ்வொரு தேர்தலிலும் ஜாதிய வாக்குகளே பீகார் மாநில ஆட்சிக்கட்டிலில் அமர்வது யார் என்பதை தீர்மானிப்பது குறிப்பிடத்தக்கது.