முதுகு வலி குணமாகும் என நம்பி, உயிருள்ள தவளைகளை முழுங்கிய மூதாட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி ஜாங். 82 வயதாகும் இவர், நீண்ட நாட்களாகவே தீராத முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த வலியை குணப்படுத்த இவர், போகாத மருத்துவமனை இல்லை, சாப்பிடாத மருந்துகளும் இல்லை. என்னென்னவோ செய்து பார்த்தும் இவரது முதுகுவலிக்கு ஒரு விடிவு காலம் பிறக்கவில்லை. அப்போது தான், இவரது உறவினர் ஒருவர், முதுகு வலி தீர ஒரு வினோத மருத்துவம் கூறியிருக்கிறார். அது என்னவென்றால், உயிருள்ள தவளைகளை விழுங்கினால் முதுகு வலி சரியாகும் என அந்த உறவினர் கூறி உள்ளார். இதை உண்மை என நம்பிய மூதாட்டி ஜாங், தனது மகன்களிடம் உயிருள்ள 8 தவளைகளை பிடித்து வரும்படி கூறியிருக்கிறார். இதை முதலில் அவரது மகன்கள் வேண்டாம் என்று தான் கூறி உள்ளனர். ஆனால், மூதாட்டி ஜாங், வற்புறுத்தியதால் வேறு வழி இல்லாமல் இவர்களும், 8 சிறிய தவளைகளை பிடித்து அவரிடம் கொடுத்தனர். ஜாங் முதலில் 3 தவளைகளை விழுங்கியுள்ளார். அடுத்த நாள் மீதமுள்ள 5 தவளைகளை விழுங்கி இருக்கிறார். அதன் பின் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இருந்த முதுகு வலியை விட, இந்த வயிற்று வலி மிகவும் கொடுமையானதாக இருந்திருக்கிறது. நிலைமையை புரிந்து கொண்ட மூதாட்டி ஜாங், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு நடந்த பரிசோதனையில், உயிருள்ள தவளைகளை விழுங்கியதால் ஜாங்கிற்கு உணவு செரிக்கும் வயிற்று பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் வயிற்றுக்குள் சில ஒட்டுண்ணிகளும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எவரோ கூறினார்கள் என நம்பி, உயிருள்ள தவளைகளை விழுங்கிய மூதாட்டி ஜாங்கிற்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இணையவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் நோய்களை குணப்படுத்துவதற்காக உயிருள்ள தவளைகள் மற்றும் விலங்குகளின் பாகங்களை உபயோகிப்பது பாரம்பரிய மருத்துவமாக இருந்து வருகிறது. உயிருள்ள விலங்குகளை மனிதர்கள் உண்ணும்போது அவர்களது வலிமை பல மடங்கு உயரும் எனவும் நம்பப்படுகிறது. ஆனால், இந்த நவீன உலகில், இதுபோன்ற நடைமுறைகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.