தமிழக மீனவர்களை சிங்கள அரசு தொடர்ந்து கைது செய்வது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்கு கொண்டு வர இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டுமென மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மாதங்களில் மட்டும் 425 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்ட அவர், மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதை இலங்கை அரசு வாடிக்கையாக வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தினார்.