டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக இருந்ததாக கூறப்படும் டாக்டர், டெலிகிராம் மூலம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பல பேருக்கு கை மாறிய கார் மூலம் கொடூர சம்பவம் நிகழ்த்தப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தலாக மாறி வரும் WHITE COLLAR TERRORISM குறித்தும், டாக்டர்கள் போர்வையில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பது குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.நாட்டையே உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் தான் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யாத சூழலில், முதற்கட்ட விசாரணையில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய தகவல் வெளியாகி அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.அந்த வகையில், செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய ஹூண்டாய் I 20 காரை ஓட்டி வந்தது ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் என்பது தெரியவந்துள்ளது. பயங்கரவாதிகள் நடமாட்டம் பரவலாக இருக்கும் புல்வாமாவை பூர்வீகமாக கொண்ட உமரின் பின்னணியை தோண்டிய போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது.அதாவது, திங்கட்கிழமை காலையில் தான் ஹரியானாவின் ஃபரிதாபாத்திலும், உத்தரபிரதேசத்தின் ஷஹ்ரன்பூரிலும் சுமார் 2,900 கிலோ சக்தி வாய்ந்த வெடி மூலப் பொருட்களுடன் மருத்துவர்கள் முஜாமில் ஷாகில், அதில் அகமது ரத்தெர் ஆகிய இருவரும் சிக்கினர். வெடி மருந்துகளுடன் சிக்கிய 2 மருத்துவர்களுக்கும், உமருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அடிக்கடி மூன்று பேரும் பேசி வந்ததும் உறுதியாகியுள்ளது.நண்பர்கள் இருவரும் வெடி மருந்துகளுடன் மாட்டிக் கொண்ட பதற்றத்தில் தான் தற்கொலை படை தாக்குதல் போல உமர் இந்த சதித் திட்டத்தை தீட்டியிருக்கலாம் எனவும் சொல்கிறது டெல்லி காவல்துறை வட்டாரம். ஃபரிதாபாத்தில் பிடிபட்டது 2,900 கிலோ வெடி மூலப்பொருள் என்ற நிலையில், டெல்லியில் வெடித்த காரில் இருந்தது Ammonium Nitrate Fuel Oil என்பதும் தடயவியல் சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 94 சதவீதம் அமோனியம் நைட்ரேட்டும், 6 சதவீத டீசலும் கலந்த கலவை தான் Ammonium Nitrate Fuel Oil ஆகும். வெடித்து சிதறிய காரில் இருந்த உமரும், வெடி மருந்துகளுடன் சிக்கிய அதீல், முஜாமில் ஆகிய மூன்று பேரும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அதீல், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணிபுரிந்த நிலையில், முஜாமில் ஹரியானாவிலுள்ள Al Falah மருத்துவமனையில் சீனியர் RESIDENT ஆக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.முஜாமில்லின் தோழியான ஷாகீன் ஷாகித் என்பவரும் ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் கைதான நிலையில், தற்போது உமரும் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது. அதீல், முஜாமில், உமர் ஆகிய மூன்று பேரும் ஒன்றாக அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் வேலை பார்த்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து ஹரியானா Al Falah மருத்துவமனையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவமனை ஆய்வகம், வெடி மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதா? அங்குள்ள பணிபுரியும் வேறு மருத்துவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.சமீபகாலமாக, WHITE COLLAR TERRORISM அதிகரித்து வருகிறது என ஜம்மு காஷ்மீர் போலீஸ் அலர்ட் விடுத்திருந்த சில நாட்களிலேயே, டாக்டர் வேலை பார்த்து வந்தவர்கள் நாசகார செயல்களில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.அதாவது, நன்றாக படித்து டாக்டர் போன்ற பெரிய பெரிய உத்யோகத்தில் இருந்து கொண்டே நாச வேலையில் ஈடுபடும் நபர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது என்பது தான் WHITE COLLAR TERROR SYSTEM என்பதாகும்.சந்தேகம் வராத அளவுக்கு வேறொரு அந்தஸ்து மிக்க அடையாளத்தில் ஒளிந்து கொண்டு, தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து நாச வேலைக்கு உதவியாக இருப்பது தான், தற்போது சிக்கியிருக்கும் டாக்டர்களின் பின்புலம் எனவும் சொல்லப்படுகிறது.மேலும், வெடித்து சிதறிய காரை ஓட்டி வந்த உமர், டெலிகிராம் மூலமாக பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.டாக்டருக்கு படிக்க வைத்து பயங்கரவாத பயிற்சியும் கொடுத்து மக்களோடு மக்களாக ஊடுருவ விட்டு, பின்னர் நாசகாரவேலைகளில் ஈடுபட வைக்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் கீழ் இயங்கும் இவர்களும் தங்களுக்கான வேலைகள் வரும் வரை அடையாளத்தை காட்டிக் கொள்ளாமல் சக மனிதர்கள் போலவே வாழ்ந்து வருவார்கள் எனவும் சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, வெடித்து சிதறிய ஹூண்டாய் ஐ20 கார், பல கைகள் மாறியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஹூண்டாய் I20 கார் 3.19 மணியளவில் செங்கோட்டை மெட்ரோ பார்க்கிங்கிற்கு வந்து சுமார் 3 மணி நேரமாக அங்கேயே தான் நின்றிருந்தது. 6.45 மணியளவில் பார்க்கிங்கில் இருந்து புறப்பட்டு இருக்கிறது. பின்னர், யூடர்ன் எடுத்து சிக்னல் நோக்கி மெதுவாக வந்து கொண்டிருக்கும் போதே வெடித்து சிதறியிருக்கிறது. HR 26 CE 7674 என்ற ஹரியானா மாநில பதிவெண் கொண்ட அந்த காரின் உரிமையாளர் சல்மானை கைது செய்து விசாரித்த போது, கார் தேவேந்தர் என்பவருக்கு விற்கப்பட்டது தெரிய வந்தது. தேவேந்தரிடம் இருந்து ஆமீர் என்பவரிடம் கை மாறிய கார், ஆமீரிடம் இருந்து தாரீக் என்பவரிடம் சென்றிருக்கிறது. பின்னர், கடைசியாக தான் டாக்டர் உமர் கைக்கு வந்திருக்கிறது.ஆமீர், தாரீக், உமர் ஆகிய 3 பேருமே ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்து பழக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. இத்தனை பேரிடம் கை மாறிய ஹூண்டாய் ஐ 20 கார், இன்னும் உரிமையாளர் சல்மான் பெயரிலேயே தான் இருக்கிறது. மறு பதிவு செய்யப்படாமலேயே கார் பல பேருக்கு விற்கப்பட்டு கை மாறியிருக்கிறது. ஃபரிதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஹூண்டாய் ஐ 20 கார், பதார்பூர் பார்டர் வழியாக டெல்லிக்குள் நுழைந்து மத்திய டெல்லியான செங்கோட்டை பகுதிக்கு வந்திருக்கிறது. கார் வெடித்து சிதறியதில் காரை ஓட்டி வந்த உமர் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து இறந்து விட்ட நிலையில், கிடைத்த சில உடல் பாகங்கள் DNA சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த சரியாக 7 மணியளவில் பயங்கர தீப்பிழம்புடன் கார் வெடித்து சிதறியிருக்கிறது. மேலும், வெடித்து சிதறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு செங்கோட்டை சுங்கச் சாவடியை ஹூண்டாய் ஐ 20 கார் கடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் பதிவாகியுள்ளது. அந்த காட்சியில் மாஸ்க் அணிந்த நபர் ஒருவர் காரை ஓட்டிச் செல்லும் நிலையில், வேறு யாரும் காரில் இல்லாததும் உறுதியாகியுள்ளது. இதையும் பாருங்கள் - NIA கையில் சிக்கிய ஆதாரங்கள்? நடுங்க விடும் கார் வெடிப்பு பின்னணி | Delhi Car Blast | CCTVFootage