திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம் (வாகைபதி) ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயில் ஆவணி பெருந்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. கடந்த 5ஆம் தேதி, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, அனுமன், கருடன், பல்லக்கு, நாக வாகனம், வெள்ளை குதிரை வாகனத்திலும், இந்திர வாகனம் போன்ற வாகனங்களில் நாள்தோறும் எழுந்தருளி, அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் வழங்கி, அருள் வாக்கு கொடுத்து வந்தார். திருவிழாவின் நிறைவு நாளான இன்று திருத்தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரின் முன் மேளதாளம், செண்டை மேளம் முழங்க , சிறுமிகள் கோலாட்டம் அடித்து ஆடிப் பாடி வந்தனர், அய்யா வைகுண்டர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . தேர் திருவிழாவில், ’அய்யா சிவ சிவ அரகரா, அய்யா உண்டு’ எனும் கோஷங்கள் முழங்க, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.