North Atlantic Treaty Organization என்று சொல்லப்படுகிற NATO போன்ற ராணுவ கட்டுப்பாட்டை உருவாக்க, அரபு நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதற்கு காரணம், கத்தார் தலைநகர் தோஹாவில், ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தான். இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அரபு நாடுகளிடையே ராணுவ கூட்டணியை உருவாக்கும் முயற்சி வேகமெடுத்துள்ளது. கத்தாரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் குறித்து விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள், தோஹாவில் அவசர உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன. இதற்கான முன்னேற்பாடு தொடர்பான கூட்டத்தில் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பங்கேற்றனர்.ஈரான் அதிபர், ஈராக் பிரதமர் மற்றும் பாலஸ்தீன அதிகார சபை தலைவர் உட்பட பல உயர்மட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான், ஒரு ராணுவ கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று, எகிப்து தரப்பில் ஒரு திட்டத்தை முன் வைத்துள்ளனர். எகிப்தின் யோசனை, ராணுவ கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதன் தலைமைப் பொறுப்பு, 22 அரபு லீக் நாடுகளிடம் சுழற்சி முறையில் ஒப்படைக்கப்படும். இதன் முதல் தலைவர் எகிப்தை சேர்ந்தவராக இருப்பார் என்று தகவல்கள் வெளி வந்துள்ளன. கத்தாரில், இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேலும் அதிகரிக்கக்கூடும். இதனால், இஸ்ரேஸ் பேரழிவை சந்திக்கும் என்று எகிப்து எச்சரித்துள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி, தோஹாவில் உள்ள கட்டடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது, அரபு நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆக, இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றுகூடிவிட்டன அரபு நாடுகள். ராணுவம், விமானப்படை, கமாண்டோ பிரிவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு, பயிற்சி, தளவாடங்கள், ராணுவ அமைப்பு என்று களம் இறங்கிவிட்டனர். இந்த ராணுவ படைக்கு வலு சேர்க்கும் விதமாக, 20,000 ராணுவ வீரர்களை வழங்குவதாக எகிப்து கூறியிருக்கிறது.கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அரபு நாடுகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துவிட்டது. சொல்லப்போனால், இஸ்ரேலுடன் ராஜ்ய உறவை கொண்டுள்ள ஒரே நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது. ஈராக் பிரதமரும், ராணுவ கூட்டணியை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார். காசா மற்றும் கத்தாரில் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கூட்டு பதிலடி அவசியம் என அரபு நாடுகள் கொந்தளித்துள்ளன. கத்தார் பிரதமரின் சமீபத்திய பேட்டியில், "சர்வதேச அமைப்பு தங்களின் இருதரப்பட்ட நிலைப்பாட்டை புறந்தள்ளிவிட்டு, இஸ்ரேலை தண்டிக்க வேண்டிய நேரமிது" என்று ஆவேசப்பட்டுள்ளார். எங்களது சகோதரத்துவ மக்களான பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்து, அவர்களின் நிலத்தை அபகரிக்க நினைக்கும் இஸ்ரேல் எண்ணம் பலிக்காது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். அரபு நாடுகளிடையே ராணுவக் கூட்டணியை உருவாக்கும் திட்டம், நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், அது செயல்பாட்டுக்கு வரும் சூழல் வெகுதூரமில்லை என கூறப்படுகிறது. இதுபோன்ற திட்டம் சிக்கல் நிறைந்தது என்றும், குறிப்பாக அரபு நாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர வேறுபாடுகளை கையாள்வதே சிரமம் தான் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், அடி மேல் அடி வைத்தால், அம்மியும் நகருமே... இஸ்ரேல் அடி மேல் அடி வைப்பது அரபு நாடுகளை கொந்தளிக்க வைத்திருப்பது இயல்பு தான்.. சாது மிரண்டால்... காடு கொள்ளாது என்பது நிதர்சனம் தானே... இதையும் பாருங்கள் : இஸ்ரேலுக்கு எதிராக ஒன்று கூடும் அரபு நாடுகள்! உருவாகிறது ஒரு ராணுவ கூட்டணி... | Gaza War | Isreal