கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தடை கோரி, தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கரூரில், தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரியும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட கோரியும் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், கரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவிடம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறினார். இதனையடுத்து கரூரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், கரூர் விவகாரத்தில் உண்மையை முழுமையாக வெளிக் கொண்டு வர வேண்டும். உரிய விசாரணை நடைபெற வேண்டும் என்றால் சிறப்புக்குழு விசாரணை மூலம் முறையாக நடைபெறாது. எனவே, SIT விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.