திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 55 ஆயிரத்து 210 ரூபாய் பணம் சிக்கியுள்ளது. சார் பதிவாளராக ப்ரீத்தி என்பவர் பணியாற்றி வரும் நிலையில், அவருடைய தந்தை செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை பார்த்து கொலையா பண்ணீட்டாங்க என்று கூறிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 25 ஆயிரத்து 350 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், திடீர் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் என 25 பேரிடம் விசாரணை நடத்தினர்.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 71 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பரிசு பொருட்கள் மற்றும் பணம் லஞ்சமாக பெறுவதாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஈரோடு மாவட்டம் கீழ்பவானி நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திய போது, 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயுடன் வந்த ஒப்பந்தகாரர்கள் இருவரை மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக உதவி செயற்பொறியாளர் குமரேசன் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 52 ஆயிரத்து 600 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின் பெயரில் சோதனை செய்த லஞ்ச ஒழிப்புதுறையினர் கணக்கில் வராத பணம் மற்றும் பட்டு சேலைகளை கைப்பற்றினர்.