கரூர் சம்பவம் தொடர்பாக, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.கரூரில் விஜய் பங்கேற்ற தவெக கட்சியின் மக்கள் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் இருந்து மத்திய அரசு அனுப்பி வைத்த அமைச்சர்கள், எம்பிக்கள் அடங்கிய குழு, விசாரணை மேற்கொண்டது. தமிழக அரசு நியமித்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் விசாரணையும், உயர் நீதிமன்றங்களின் விசாரணையும், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையும் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில், கோவையில் இருந்து டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் ஐந்து மாநில பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ள நிலையில் அதில் அண்ணாமலையும் பங்கேற்க உள்ளார். இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், ஓபிஎஸ், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. கரூரில் நடைபெற்ற தவெகவின் பிரச்சார அசம்பாவிதம் குறித்து டெல்லியிலேயே அமித்ஷா மற்றும் தேசிய பொதுச்செயலாளர் உள்ளிட்டோரை சந்தித்து அண்ணாமலை விளக்கம் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.