சட்டப்பேரவை வளாகத்தில் அன்புமணி ஆதரவு பாமக எம்.எல்.ஏ.க்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான ஜி.கே.மணியை சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்தும், எம்எல்ஏ அருளை கொறடா பொறுப்பில் இருந்தும் நீக்கக்கோரி முழக்கமிட்டனர். பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணியை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரி, கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி, அந்தக் கட்சியின் எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவுவுக்கு எழுத்து மூலம் மனு அளித்திருந்தனர். எனினும், அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாமக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, சபாநாயகரின் அலுவலகம் முன்பு பாமக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். “சபாநாயகர் உடனடியாக தீர்மானம் எடுக்க வேண்டும்” என கோஷம் எழுப்பிய அவர்கள், தங்களது கோரிக்கைக்கு நீதி கிடைக்கும் வரை அமைதியான போராட்டத்தைத் தொடர்வதாக தெரிவித்தனர்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக எம்எல்ஏ வெங்கடேசன்,பாமக சட்டமன்ற குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் கொறடாவுக்கு தனி இருக்கை வழங்க வேண்டும் என சபாநாயகரிடம், கோரிக்கை வைத்தோம், சபாநாயகர் ‘மாலை பேசிக் கொள்ளலாம்’ என கூறியுள்ளார். விரைவில் எங்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படும் என நம்புகிறோம், என்று கூறினார். ராமதாஸ் தரப்பினரும் சபாநாயகருடன் சந்திப்பு:அன்புமணி தரப்பினரை தொடர்ந்து, ராமதாஸ் தரப்பினரும் சபாநாயகரை சந்தித்தனர். ராமதாஸ் தரப்பை சேர்ந்த ஜி.கே.மணி, சேலம் அருள் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து, பாமகவின் சட்டமன்ற குழு தலைவராக தாமே தொடர்வதாக ஜி.கே.மணி கூறியுள்ளார். பாமகவின் கொறடா தான் தான் என சேலம் அருள், சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, “பாமக 2ஆக செயல்படுவது வருத்தமாக இருக்கிறது, பாமக ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.