காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் கிராமத்தில் சொக்கம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஆவணி மாத விழாவையொட்டி கடந்த இரண்டாம் தேதி பக்தர்கள் காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 10ஆம் தேதி பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து படைத்தலும், கிராம மக்கள் அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வருதல், தேர் திருவிழா உள்ளிட்டவை விமர்சையாக நடைபெற்றன. ஆவணி மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆன இன்று சொக்கம்மன் சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.இதற்காக, விஷேச பூ அலங்காரத்தில் உற்சவ மூர்த்தியாக ஊஞ்சலில் எழுந்தருளிய சொக்கம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் கைகளாலேயே ஊஞ்சலை ஆட்டிவிட்டு அம்மனை தாலாட்டினர். ஊஞ்சல் திருவிழாவையொட்டி ஆலய வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.