ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்துக்கு 2 நாள் பயணமாக அமித்ஷா வருகிறார். அவரை வரவேற்கும் வகையில் பாஜக சார்பில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டன. இதில் நகைச்சுவையாக ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டரில் அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததால் பாஜகவினரை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் சந்தானபாரதியின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரில், ‛‛ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் இந்தியாவின் இரும்பு மனிதரே! வாழும் வரலாறே! வருக! வருக! என எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் அருள்மொழி, மாநில செயற்குழு உறுப்பினர் ராணிப்பேட்டை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பாஜகவினருக்கு அந்த கட்சியின் மூத்த தலைவரான அமைச்சர் அமித்ஷாவை அடையாளம் தெரியவில்லையா என்று கிண்டலடித்து வருகின்றனர். இதற்கிடையே அந்த போஸ்டருக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தன் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், அதனால் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் பாஜக நிர்வாகி அருள்மொழி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால் இந்த போஸ்டரை ஒட்டியது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் போட்டோவை பாஜக போஸ்டரில் இடம்பெற செய்வது இது முதல் முறையல்ல இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.தமிழக பாஜகவினரை குழப்பமடைய செய்யும் இந்த சந்தான பாரதி, கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து விருதுகளை குவித்த குணா, மகாநதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். ஏராளமான திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.