ஒரு இந்தியன் என்பதிலும், தமிழ்த் திரைப்பட நடிகர் என்பதிலும் பெருமை கொள்வதாக நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களை ஆட்சி செய்யும் ஜாம்பவான்களில் ஒருவர் தான் அஜித்குமார். திரைப்படங்களில் நடிப்பதை தவிர வேறெந்த நிகழ்ச்சிகளிலும், அதிகமாக ஊடக கண்களிலும் படாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் அஜித்தை ரசிகர்கள் கொண்டாட தவறுவதில்லை. பைக், கார் ரேஸில் அதீத ஆர்வம் கொண்ட அஜித், தற்போது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடந்து வரும் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். இந்த சூழலில் அங்குள்ள தனியார் ஊடகத்திற்கு அஜித் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அஜித் கூறி இருப்பதாவது:இந்திய சினிமாவை உலகளவில் விளம்பரப்படுத்தும் ஒரு தளமாக ஸ்போர்ட்ஸை பயன்படுத்த நினைக்கிறேன். சர்வதேச அளவில் நடத்தும் விருது விழாக்கள் மூலம் திரைப்படங்கள் உலக பார்வையாளர்களை ஈர்க்கின்றன. உதாரணமாக, கொரிய படங்கள் இந்தியாவில் பிரபலமாகியுள்ளன. இதேபோல நம் நாட்டில் எடுக்கும் திரைப் படங்களுக்கும் உலகளவில் வரவேற்பு கிடைக்க வேண்டும். ஒரு சில பாலிவுட் படங்கள் மட்டுமே உலக கவனத்தை ஈர்க்கிறது. இதேபோல, இந்தியாவில், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, போஜ்புரி மொழி சார்ந்த படங்களும் உலக ரசிகர்களை சேர வேண்டும். இதனால், கார் ரேசில் இந்திய சினிமாவை பிரபலப்படுத்த விரும்புகிறேன். 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளுடன் உலகிலேயே மிகப்பெரிய சினிமா தயாரிப்பாளர்களாக நாம் இருக்கிறோம். விளையாட்டும், சினிமாவும் மக்கள் வாழ்வில் முக்கியமானது என்பதால் அதை விளம்பரப்படுத்த, இந்தியன் சினிமா என்ற லோகோவை உருவாக்கி, அதை எனது அடுத்த கார் ரேஸில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன் இவ்வாறு இந்திய சினிமா மீது, அஜித் வைத்துள்ள அதீத அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசிய அஜித்... என்னால் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்க முடியும், எனக்கு தூக்கமின்மை பிரச்சனை இருப்பதால், இரவில் அதிக நேரம் தூங்க முடியாது. அப்போது திரைப்படங்களை பார்ப்பேன். என் மனைவி ஷாலினியின் ஆதரவு மட்டும் இல்லை என்றால், என்னால் சினிமாவிலும், கார் பந்தயத்திலும் இவ்வளவு வெற்றிகளை பார்த்திருக்க முடியாது எனது ரசிகர்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன், ரசிகர்கள் இல்லை என்றால் என் வாழ்க்கையில் எதுவும் சாத்தியமாகி இருக்காது இவ்வாறு அஜித் குமார் நெகிழ்ச்சி தெரிவித்தார்.