இந்திய விமானப்படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில், நமது விமானப்படையின் திறனையும், வலுவையும் பறைசாற்றும் வகையில் சுமார் இரண்டு மணி நேரம் மக்களை மெய்சிலிர்க்க வைத்த சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.இந்திய விமானப்படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட சாகச நிகழ்வுக்காக சென்னை மெரினா கடற்கரை விழாக்கோலம் பூண்டது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல லட்சம் மக்கள் திரண்ட நிலையில் காலை 11 மணி அளவில் விமானப்படை சாகச காட்சிகள் துவங்கின. முதலில் நான்கு சேதக் ஹெலிகாப்டர்கள் நிகழ்ச்சி துவங்குவதை குறிக்கும் வகையில் தேசிய கொடியை ஏந்தியவாறு அணிவகுத்தன.அதைத் தொடர்ந்து அதிவேக போர் விமானமான ரபேல் மெரினாவின் மேல் பறந்து இந்திய விமானப்படையின் வேகத்தை வெளிக்காட்டியது. தீப்பொறி பறக்க இடி முழக்கத்துடன் சென்னையை அதிர வைத்தது ரபேல்.ரபேலை தொடர்ந்து சங்கம் ஃபார்மேஷன் என்ற பெயரிலும், அதைத் தொடர்ந்து சேரன் ஃபார்மேஷன் என்ற பெயரில் இந்தியாவின் பாரம்பரியமிக்க டகோட்டா விமானம் சாகச நிகழ்ச்சியை நடத்தியது.இந்த வரிசையில், பல்லவா, கலாம்,காவிரி, காஞ்சி, நட்ராஜ்,தனுஷ், நீல்கிரீஸ் உள்ளிட்ட பெயர்களில் போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் சாகச காட்சிகளை நடத்திக் காட்டின.விமானப்படையில் சேரவுள்ள HTT 40 விமானம் கண்ணை கவர்ந்தது.ஜாகுவார் மற்றும் தேஜஸ் இலகு ரக போர் விமானங்களின் சாகச காட்சிகளை மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மிக் மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் காற்றில் மிதப்பதை போல பறந்தன.சுகோய் Su-30 MKI விமானங்களின் சாகச காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்த து. அதிரடி தமிழ் பாடல்கள் மற்றும் டயலாக்குகளின் பின்னணியில் தமிழ்ச்சுவையுடன் நடத்த வான் சாகசத்தில், விமானங்கள் குட்டிக்கரணம் போட்டும் அதி வேகத்தில் பாய்ந்தும் திறனை வெளிப்படுத்தின. MI17 ஹெலிகாப்டர் வானில் நிலையாக நின்றதை மக்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.மிகப்பெரிய ராணுவ விமானமான சி-17 மற்றும் அதனை தொடர்ந்து சாரங்க் விமானங்கள் அணிவகுத்து சென்றதை மக்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். சேட்டக் ஹெலிகாப்டர்களின் அணிவகுப்பு புல்லரிக்க வைத்த து. MI 1 ஹெலிகாப்டர்கள் வெள்ளைப் புகையின் பின்னணியில் வெள்ளி நட்சத்திரங்களாக மிளிர்ந்தன.விமானப்படை சாகசத்தின் உச்ச நிகழ்வாக விமானப்படைக்கு என தனித்துவமாக இருக்கும் சூர்யகிரண் வான் சாகச நிகழ்ச்சியும், மகாபலி வான் சாகசமும் வண்ண நிற புகைகளை உமிழ்ந்தவாறு நடந்தது.முன்னதாக விமானப்படை கருடா கமாண்டர்களின் வாரத்தை வெளிக்காட்டும் வகையில், பயங்கரவாதிகளை பிடிப்பது போன்ற ஒத்திகையை வீரர்கள் நடத்திக் காட்டினர். மூவர்ண கொடி நிறத்திலான பாராசூட்களில் தொங்கியவாறு விமானப்படை வீர ர்கள் சாகசங்களை நிகழ்த்தினர். விமானப்படை சாகச நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்றார். மெரினாவுக்கு வந்த முதலமைச்சர், துணை முதல்வர் உதயநிதி, தமிழக அமைச்சர்கள் , எம்பிகள் உள்ளிட்டோரை விமானப்படை அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். நிகழ்ச்சியின் முடிவில் முதலமைச்சருக்கு இந்திய விமானப்படை தளபதி Air Chief Marshal Amar Preet Singh நினைவுப் பரிசு அளித்து கவுரவித்தார்.விமானப்படை சாகசத்தை பார்க்க வந்த மக்களுக்கு விமானப்படை விண்ணில் இருந்தவாறு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டது. சென்னை மெரினாவில் நடந்த விமானப்படை சாகசம் உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற நிகழ்வாக வரலாற்றில் பதிவாகி உள்ளது. சுமார் 15 லட்சம் பேர் நமது விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.