த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி, முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்று, சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதன் மூலம், அதிமுகவின் கூட்டணி அழைப்பை, மீண்டும் தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்துள்ளது. விஜய் எப்படியாவது கூட்டணிக்கு வந்து விடுவார் என மலைபோல நம்பிக்கொண்டிருந்த அதிமுகவுக்கு, விஜய் முடிவு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், நான்கு முனை போட்டி உருவாகியிருப்பது உறுதியாகியுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே அதிமுக - தவெக கூட்டணி கை கூடுமா என்று எதிர் பார்த்து காத்திருந்தவர்களுக்கு தவெக சிறப்பு பொதுக்குழு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.விஜய், கட்சி தொடங்கியதில் இருந்தே அதிமுக கூட்டணிக்கு விஜய் செல்ல வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேச்சு அடிபட்டது. ஆனால், திமுக, தவெக இடையே தான் போட்டி என்று, விஜய் பேச தொடங்கியதில் இருந்து அதிமுக உடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என சொல்லப்பட்டு வந்தது. அதோடு,ஒவ்வொரு முறையும் அதிமுகவுடன் விஜய் கூட்டணி என யூகமாக தகவல் வெளியாகும் போதெல்லாம் த.வெ.க. சார்பில் மறுப்பு அறிக்கைகளும் கூட வெளியாகின. இவையெல்லாம் கரூர் துயர சம்பவத்திற்கு முன்பு நிகழ்ந்தவை. ஆனால், கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் அதிமுகவுடன் த.வெ.க. கூட்டணிக்கு செல்லும் என கணிக்கப்பட்டது.கரூர் சம்பவத்தில், தவெகவுக்கு ஆதரவாக அதிமுக பேசியது, அதிமுக கூட்டங்களில் த.வெ.க. கொடி பறந்தது, த.வெ.க. கொடிகளை பார்த்து இபிஎஸ், உற்சாகம் அடைந்தது என்று, காட்சிகள் மாறியதோடு, தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பு இருப்பதாக பேச்சு, ரெக்கை கட்டி பறந்தது.இன்னொரு பக்கம், தங்களது கூட்டணிக்கு த.வெ.க. வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வெளிப்படையாக அழைப்பு விடுத்தனர். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட த.வெ.க.வை காப்பாற்ற முடியாது என்று பேசியிருந்தார் ஆர்.பி.உதயகுமார். இவ்வாறு கரூர் சம்பவம் மூலம், துவண்டு கிடக்கும் தவெகவை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக மீண்டும் முயற்சித்தது. இந்த நிலையில், கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி, த.வெ.க. தலைமையில் தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதன் மூலம் அதிமுகவின் அழைப்பை தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கரூர் சம்பவம், விஜய்யின் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனாவும், கரூர் சம்பவத்தை வைத்து திமுக தங்கள் மீது அவதூறு பரப்பியது என்றால், இன்னொரு பக்கம் அதிமுக தங்களை மட்டுப்படுத்தி பார்க்கிறது என்ற கருத்தையும் முன் வைத்தார். அதாவது, கூட்டணிக்கு அழைத்து தங்களை அதிமுக மட்டுப்படுத்த பார்ப்பதாக, ஆதவ் அர்ஜூனா முன்வைத்த வாதம் தான் விஜய்யின் எண்ண ஓட்டமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. திமுகவுக்கு எதிரியாக, தன்னை முன்னிறுத்தி வரும் விஜய், அதிமுக கூட்டணியில் இணைய துளியும் விரும்பவில்லை என்பதின் வெளிப்பாடு தான் பொதுக்குழு கூட்டம் என்கிறார்கள்.அதிமுக உடன் கூட்டணி வைத்தால், ஆட்சி மாற்றம் நிகழ்வது கிட்டத்தட்ட உறுதியானாலும், வருகிற தேர்தலில் தனது வாக்கு பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் தான், விஜய் உறுதியாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.அதேபோல, அதிமுக உடனான கூட்டணி முடிவு தவெக தொண்டர்களுக்கு சோர்வை கொடுக்கும் என்பதையும் விஜய் புரிந்து வைத்திருப்பதும், இந்த நிராகரிப்புக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. திமுகவுக்கு எதிராக, கூட்டணியை வலுப்படுத்த முனைப்பு காட்டி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, விஜய்யின் முடிவு சங்கடத்தை கொடுத்திருக்கும் என்றே சொல்கிறார்கள்.அதிமுகவின் முந்தைய தலைவர்களான எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கூட்டணி அமைப்பதில் சாணக்கியத்தனமாக செயல்பட்டாலும் இருவருமே எந்த கட்சிக்காகவும் எடப்பாடி பழனிசாமி அளவுக்கு இறங்கி வந்தது இல்லை.தேர்தல் அரசியலில் த.வெ.க.வை கூட்டணிக்கு இழுக்கும் வியூகம் எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுக்காமல் போய்விட்ட நிலையில், அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.இதையும் பாருங்கள் - அழைத்த அதிமுக - விரும்பாத விஜய் - டார்கெட்டில் ஆப்ரேஷன் திமுக - பொதுக்குழுவில் OPEN ஸ்டேட்மெண்ட்