கேட்கும் தரவுகளை கையிலேயே கொடுத்து வேலையை எளிதாக்கும் CHAT GPT, GEMINI AI, PERPLEXITY ஆகிய AIக்கள் மூலம், இந்தியாவில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அச்சம் எழுந்துள்ளது. அதிகளவில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் நாடுகளில், இந்தியா 2ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், இலவசம் என்ற பெயரில் பயனர்களை AI-க்கு பழக்கி விட்டு அடிமையாக்கும் டிஜிட்டல் யுக்திக்கு பின் ஒளிந்திருக்கும் மர்மங்களை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.டிஜிட்டல் உலகில் எல்லாமே எளிதாகி விட்டது. முக்கியமாக, கையிலேயே அனைத்து தரவுகளும் கிடைக்கும் வகையில் நாளுக்கு நாள் நவீனமாகி வருகிறது. இந்த வரிசையில் தான் தற்போது CHAT GPT, GEMINI AI, PERPLEXITY ஆகிய AI-க்கள் அறிமுகமானாலும், AI மூலம் மனித வளத்திற்கே ஆப்பு வரக்கூடிய அபாயமும் வந்து விட்டது. AI பயன்பாடு காரணமாக பெரிய பெரிய நிறுவனங்கள் LAY OFFல் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த AIக்கள் மூலம் இன்னொரு ஆபத்து சூழ்ந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அதாவது, உலகிலேயே அதிகளவில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா தான் 2ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகையில் 73 கோடி பேரிடம் ஸ்மார்ட் போன் உள்ளது.செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொரு இந்தியனும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 21 ஜிகாபைட்ஸ் அளவுக்கு நெட் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில், கூகுள் நிறுவனம் தனது GEMINI AI PRO சப்ஸ்கிரிப்ஷனை 18 மாதத்திற்கு சுமார் 500 மில்லியன் ஜியோ பயனர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.இந்த GEMINI AI PRO சப்ஸ்கிரிப்ஷன் தொகை 400 அமெரிக்க டாலர் என்ற நிலையில், அதனை இலவசமாக பயனர்களுக்கு வழங்கும் சூட்சமம் தான் தற்போது வெளிவந்துள்ளது. GEMINI AI வரிசையில், OPEN AIயின் CHATGPTயும் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தனது சேவையை இந்தியாவில் இலவசமாக வழங்கி வருகிறது.ஆரம்பத்தில் இருந்த AI பயன்பாட்டுக்கும், இலவசம் என அறிவித்ததற்கும் பிறகான பயன்பாடும் பல மடங்கு இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதன்படி, இந்தியாவில் CHAT GPT செயலியின் பயனர்கள் எண்ணிக்கை கடந்த வாரம் நிலவரப்படி 607 சதவீதம் அதிகரித்து 73 மில்லியனாக உயர்ந்துள்ளது.இது வளர்ந்த வல்லரசு நாடான அமெரிக்காவில் உள்ள பயனர்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது. அதே போல, GEMINI AIயின் தினசரி பயனர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.குறிப்பாக, நவம்பரில் இலவசமாக சேவையை கொடுக்க தொடங்கியதில் இருந்து 15 சதவீதம் அதிகரித்து கடந்த வார நிலவரப்படி 17 மில்லியனை தொட்டுள்ளது.இந்த எண்ணிக்கையும் அமெரிக்க பயனர்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாம்.இதன் மூலம் GEMINI AI மற்றும் CHAT GPT AIக்களின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறியுள்ளது.இதனிடையே, PERPLEXITY AIயும் 200 டாலர் தொகையுள்ள SUBSCRIPTIONஐ ஏர்டெல் பயனர்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கியுள்ளது. தற்போது, PERPLEXITY AIயின் மொத்த பயனர்களில், மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதும் தரவுகளில் தெரிவிக்கப்படுகிறது.கடந்த நவம்பர் மாதம் மட்டும் இந்தியாவில் மாதாந்திர பயனர்களில் 46 சதவீதம் பேர் CHAT GPTயும், GEMINI AIஐ 14 சதவீதம் பேரும், PERPLEXITY AIஐ 20 சதவீதம் பேரும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.அதாவது, எவ்வளவோ நாடுகள் இருந்தும் கூட, இந்தியாவை குறி வைத்து AI நிறுவனங்கள் தங்கள் சலுகைகளை, இலவசங்களை அறிவித்து இருப்பது ஆபத்துக்கு வழிவகுக்கக் கூடியதாக இருப்பதாக கருதுகிறார்கள் வல்லுநர்கள்.AIயில் தேடப்படும் தரவுகள் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளும் திருடப்படும் அபாயம் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், பயனர்கள் தேடப்படும் தரவுகளை வைத்து, அந்தந்த AI நிறுவனங்கள், தங்களது செயலியின் செயல்பாட்டை மேம்படுத்திக் கொள்ளவும் இந்திய சந்தையை பயன்படுத்தி வருவதாக பார்க்கப்படுகிறது. இந்திய பயனர்களை சோதனை முயற்சியாக வைத்து AI நிறுவனங்கள் இந்த பரிசோதனையில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. எப்படி ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் முதலில் இலவசம் என அறிவித்து எக்கச்சக்கமான வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்து கட்டணத்தை ஏற்றியதோ, அதே மாதிரி இந்த AI நிறுவனங்களும் இலவசம் என அறிவித்து வாடிக்கையாளர்கள் சேர்ந்த பிறகு கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இலவசமாக கொடுத்து, தங்கள் பக்கம் இழுத்து விடலாம் என்று நினைத்து தான் AI நிறுவனங்கள், இங்கிருக்கும் பயனர்களை குறி வைத்திருக்கின்றன என்ற நிலையில், இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக தனிப்பட்ட தரவுகளை விலை கொடுக்க தயாராகி விட்டோமோ? என்பதை பயனர்கள் யோசித்து செயல்பட வேண்டும்.