இந்தியாவில் ஜனநாயகம் கடந்த பத்து ஆண்டுகளாக நசுக்கப்பட்டதாகவும், இப்போது அது மீண்டும் தன்னை பாதுகாக்க போராடிக் கொண்டிருப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, வாஷிங்டனின் தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மகாராஷ்டிரா, பாஜகவால் பறிக்கப்பட்டதை தாம் கண்ணால் கண்டதாக ராகுல் கூறினார். இந்தியாவில் ஜனநாயக கோட்பாடுகள் உடைக்கப்பட்டு நலிவடைந்தாலும், அது மீண்டு வரும் என தாம் நம்புவதாகவும் ராகுல் கூறினார். பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய அவர், 21 ஆம் நூற்றாண்டில், ஒரு நவீன நாட்டின் பிரதமர், தாம் கடவுளுடன் பேசியதாகவும், தாம் சாதாரண பிறவி அல்ல என பேசுவதாகவும் குற்றஞ்சாட்டினார். தேர்தலில் கிடைத்த தோல்வியால் அரசியலமைப்பை தலையில் வைக்கும் அளவுக்கு அவர் தள்ளப்பட்டார் எனவும் ராகுல் கூறினார்.