லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பற்றிய ஆவணப்படம் வரும் 18-ம் தேதி NETFLIX OTT தளத்தில் வெளியாக உள்ள நிலையில், ஆவணப்படம் எடுக்கும் அளவுக்கு நயன் தாரா என்ன செய்தார் என்ற ரீதியில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. நடிகை நயன் தாரா, லேடி சூப்பர் ஸ்டாராக மாறிய பின்னணி என்ன?தமிழ் சினிமாவை பல காலக்கட்டங்களில் பல நடிகைகள் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஏன் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தும் அளவுக்கு நடிகை குஷ்பு போன்ற புகழ் பெற்ற நடிகைகள் இருக்கத்தான் செய்தார்கள். இதற்கெல்லாம் உச்சமாக நடிகை நயன்தாராவுக்கு லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை வழங்கி அழகு பார்த்தனர் தமிழ் ரசிகர்கள்.. புன்னகை அரசி, இஞ்சி இடுப்பழகி என்றெல்லாம் நடிகைகளின் அழகையே மையப்படுத்தி பட்டங்கள் வழங்கி வந்த ரசிகர்கள், தமிழ் சினிமாவில் நோபல் பரிசுக்கு இணையாக போற்றப்படும் 'சூப்பர்ஸ்டார்' பட்டத்தை நயனுக்கு வழங்கியதில் இருந்தே அவரின் உச்சம் புரியும்..அதேசமயம், நயன்தாரா அளவுக்கு விமர்சனங்களை எதிர்கொண்ட நடிகைகளும் இல்லை என்றே சொல்லலாம்..இந்தநிலையில்தான் நயன்தாராவை பற்றிய ஆவணப்படம் NETFLIX OTT தளத்தில் வரும் 18ம் தேதி வெளியாக உள்ளது. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், நயன்தாராவுக்கெல்லாம் ஆவணப்படம் எடுக்கும் அளவுக்கு அவர் என்ன செய்தார் என்ற விமர்சனங்கள் தலைதூக்க தொடங்கியுள்ளன. தனக்கு எதிராக பல போராட்டங்கள், உருவபொம்மையை எரிக்கும் அளவுக்கு எதிர்ப்புகள் என எதுவாக இருந்தாலும் அவை எதுவுமே தன் வளர்ச்சியை பாதிக்காதவாறு தடைக்கற்களை எல்லாம் வெற்றிப்படிக் கற்களாக மாற்றி 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார் நயன்தாரா. 2005-ம் ஆண்டு ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாராவை, ஆரம்ப காலகட்டத்தில் நடிக்கத் தெரியாத சிலிண்டர் எனச் சிலர் விமர்சித்தது கூட உண்டு. அதன்பிறகு சந்திரமுகி, கஜினி போன்ற அடுத்தடுத்த படங்களில் நடிப்பில் முத்திரையிட்டு, நல்ல நடிகை என்று நயன்தாராவை ரசிகர்கள் அங்கீகரிக்க தொடங்கிய போது தான் சிம்புவுடன் காதல் என்றும் பிரேக்-அப் என்றும் அவரது பர்சனல் வாழ்க்கையே பொதுவெளியில் பேசுபொருளானது. இதுபோன்ற சம்பவங்கள் அவரது திரைப்பயணத்துக்கே பிரேக் போடும் அளவுக்கு பெரிதாகின.. அதன்பிறகு, தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் ஒதுக்கப்பட்ட நயன் 2007-ம் ஆண்டு பில்லா திரைப்படத்தின் மூலம் ரீ-எண்டரி கொடுத்தார். பிகினி உடையில் பாலிவுட் நடிகைகளுக்கே ட்ஃப் கொடுக்கும் அளவுக்கு SLIM-ஆன தோற்றத்தில் காட்சிகொடுத்து ரசிகர்களைக் கிறங்கடித்தார் .! ஆனால் அப்போதுக்கூட அறுவை சிகிச்சை மூலம் SLIM ஆகியிருப்பதாக விமர்சனம் எழுந்தது. மோசமான கேலியும் கிண்டலும் நயனை விடாமல் துரத்தின.!இதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, சிவாஜி போன்ற பல படங்களில் நடித்து டாப் கியரில் வேகமெடுத்த நயனுக்கு பிரபுதேவாவுடனான காதல் மீண்டும் ஒரு BRAKE போட்டது போல அமைந்தது. பிரபு தேவாவுடன் துபாய்க்கு பறந்த நயன், போன வேகத்தில் உறவை முறித்துக் கொண்டு மீண்டும் சினிமாவுக்கே திரும்பினார். தனது கணவர் பிரபுதேவாவை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதாக அவரது முதல் மனைவி வடித்த கண்ணீர், அனைவரும் நயன்தாராவை வில்லியாகப் பார்க்கும் அளவுக்கு மாற்றிய தருணம் அது.அந்த சமயத்தில் ஸ்ரீ ராமராஜ்ஜியம் படத்தில் சீதை கேரக்டரில் நயன் 2-வது ரீ- எண்டரி கொடுக்க, புனிதமான சீதை கேரக்டரின் நயந்தாரா-வா என கொந்தளித்த சிலர், நயன் தாராவுக்கு எதிராக போராட்டங்களிலும் இறங்கினர். ஆனால் படம் வெளியான பிறகு சீதை கேரக்டரில் நயன் தாராவின் அசாத்திய நடிப்பு அவரை வெறுத்தவர்களை கூட மெய்சிலிர்த்து ரசிக்க வைத்தது. என்னதான், சிம்பு, பிரபுதேவா என நயன்தாராவை சுற்றி பல காதல் சர்ச்சைகள் இருந்தாலும், அன்புக்காக ஏங்கும் சாதாரண பெண்ணாகவே இருந்த நயன்தாராவை, சிலர் நயவஞ்சக காதல் வலையில் வீழ்த்த முயன்றதாக பல கதைகள் கோலிவுட்டில் வலம் வந்தன. ஆனால், இந்த விமர்சனங்களையெல்லாம் கடந்து, தாண்டியும் இயக்குநர் விக்கியின் காதல், இருண்டு போய் கிடந்த நயனின் வாழ்க்கையில் ஒளியூட்டியது. அதன்பிறகு தனது தனித்துவமான துணிச்சலான நடிப்பாலும், அழகிய தோற்றத்தாலும் இன்றளவுக்கும் ரசிகர்களின் மனங்களில் ஆட்சி புரிந்து வருகிறார் நயன் தாரா.! பொதுவாக சர்ச்சைகளில் சிக்கும் நடிகைகள், திரைத்துறையை விட்டே ஒதுங்கிவிடுவது தான் வழக்கம். ஆனால் இந்த வரலாற்றை மாற்றி, எத்தனை சர்ச்சைகள் தன்னைத் துரத்தி துரத்தி அடித்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து ஆணாதிக்க சினிமா துறையில் நடிகை ஒருவர் ஆளுமையாகத் திகழ்வது சாதாரண விஷயம் அல்ல..! அந்த வரிசையில், தன் மீதான கடுமையான விமர்சனங்களை நயன்தாரா எப்படி எதிர்கொண்டார்? அவதூறுகளை எப்படி சமாளித்தார்? எல்லாவற்றையும் தாண்டி சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக நயன் தாரா மாற, அவர் எடுத்த முயற்சிகள் தான் என்ன? நடிகை என்பதை தாண்டி தற்போது முன்னணி தொழிலதிபராக உருவெடுத்திருக்கும் நயன்தாராவின் வெற்றி ரகசியம் என்ன? திரைக்கு பின்னால் நயன் தாராவின் மனநிலை தான் என்ன? என்பதை ரசிகர்களுக்கு எடுத்துச் சொல்வது தான் இந்த ஆவணப்படத்தின் கதை என சொல்லப்படுகிறது. beyond the fairytale என்ற டேக் லைனும் அதையே உணர்த்துவதாக உள்ளது. ஆவணப்படம் எடுக்கும் அளவுக்கு நயன்தாரா என்ன செய்தார் என்ற விமர்சனங்களுக்கு, நயன்தாரா கடந்து வந்த கரடுமுரடான பாதையே பதிலாக உள்ளது என்பதை இந்த ஆவணப்படம் அழுத்தமாகப் பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.