பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். இந்த நிகழ்ச்சிகளில், இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பிரபலமடைந்தார். முக்கியமாக, நடிகர் தனுஷ் உடன் மாரி, விஷாலுடன் இரும்புத்திரை உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில், நடிகர் ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சினிமாவில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார். படிப்படியாக உடல்நலம் தேறி, மீண்டும் சினிமாவில் சுறுசுறுப்பாக நடித்து வந்தார்.இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சினிமா படப்பிடிப்பின் போது, திடீரென மயங்கி விழுந்ததாகவும், உடனே மருத்துவமனையில் சேர்த்த போதும், இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த தகவல் அறிந்து, திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காமராஜர் பல்கலைக் கழகத்தில், எம்ஏ பொருளாதாரம் படித்த சங்கர், கிராமத்து கலை நிகழ்ச்சிகளில் ரோபோ போன்று நடித்து, ரோபோ சங்கர் என பெயர் பெற்றார். கலகலப்பான மனிதர் என திரைத்துறை வட்டாரத்தில், பெயர் எடுத்தவர். இவரது திடீர் மறைவு திரையுல வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதையும் பாருங்கள்; நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | Comedy Actor Robo Shankar Died | Jaundice