தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தன் திரை பயணத்தில் எவ்வளவு உயரம் சென்றாலும், தன் ஆன்மீக சிந்தனைகளை ஒருபோதும் கைவிட்டதில்லை.ரஜினிகாந்த்... தமது திரைப்பட வெளியீட்டிற்கு பிறகு, இமயமலைக்குச் சென்று வருவதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளார். தற்போதும் நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார். ரஜினி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான 'கூலி' திரைப்படம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த வெற்றிக்குப் பிறகு, ரஜினி தற்போது இமயமலை பயணத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த முறை, 'வேட்டையன்' படம் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாதம் இமயமலைக்குச் சென்று வந்தவர், 'கூலி' திரைப்படம் வெளியாவதற்கு முன்பு, இமயமலைப் பகுதியில் மழை அதிகமாக இருந்ததால் செல்ல முடியாமல் போனது. தற்போது, ஒரு வார பயணமாக ரஜினிகாந்த் இமயமலை சென்றுள்ளார். தற்போது, உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ஆன்மீகத் தலங்களில் தரிசனம் செய்து வருகிறார். சமீபத்தில், பத்ரிநாத் கோயிலில் ரஜினி சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. தற்போது, இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள பாபாஜி குகையில் தியானம் மேற்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கைகளில் ஜெபமாலையுடன் ஆழ்ந்த அமைதியில் அமர்ந்திருக்கும் அந்தக் காட்சி, ஆன்மீகத்தில் எவ்வளவு ஆழமான நம்பிக்கையை ரஜினிகாந்த் கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. மலைப்பகுதியில் நடப்பதற்கு, ரஜினிகாந்த் தடி ஒன்றையும் கையில் வைத்து இருக்கிறார். கால் முட்டி பகுதியில் கருப்பு வண்ண பேண்டேஜ் ஒன்றை அணிந்துள்ளார். தமது திரைத்துறை வளர்ச்சிக்கு பின்னால், ஆன்மீக பலமும், யோக சாதனைகளும் தான் என்று ரஜினிகாந்த் நம்புகிறார். எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், தியானத்தை அவர் ஒருபோதும் விடுவதில்லை. இமயமலை நோக்கிய பயணம், புத்துணர்ச்சி, மன அமைதியை கொடுப்பதாக, ரஜினிகாந்த் ஏற்கனவே கூறியிருக்கிறார். இந்த ஆன்மீகப் பலத்தோடு, அடுத்தடுத்த படத்திலும் வெற்றியைத் தொடர்வார் என்று, அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.